புதிய சாதனைக்காக காத்திருக்கும் கேப்டன் கூல் தோனி..

0

புனே:

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக புனேயில் இன்று இரவு நடக்கும் ஐபிஎல் ஆட்டம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, கேப்டனாக 150வது ஆட்டமாகும். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. சீசனின் 27வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மீண்டும் மோதுகின்றன. சீசனின் முதல் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின. அதில் கடைசி ஓவர்களில் பிராவோ அதிரடி காட்ட, சிஎஸ்கே அபாரமாக வென்றது.

இந்த சீசனில் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே முதலிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் சிஎஸ்கே அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனிக்கு 150வது ஆட்டமாகும். இதுவரை விளையாடியுள்ள 149 ஆட்டங்களில் சிஎஸ்கே 88ல் வெற்றி, 60ல் தோல்வி அடைந்துள்ளது. ஒரு ஆட்டத்தில் எந்த முடிவும் இல்லை. வெற்றி சதவீதம் 59.45 ஆகும். இந்த நேரத்தில் மற்றொரு மிகப் பெரிய சிறப்பையும் தோனியும் பெற்றுள்ளார். இந்த சீசனையும் சேர்த்து இதுவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி மிகவும் அதிகபட்சமாக 11 கேப்டன்களை பார்த்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8 கேப்டன்களை பார்த்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 5, மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதரபாத் தலா 4 கேப்டன்களை பார்த்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 கேப்டன்களை கண்டுள்ளது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுவரை தோனி மட்டுமே கேப்டனாக இருந்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.