கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியும் நடிப்பதாக அந்தப் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை பீட்சா, இறைவி, ஜிகர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியும் நடிப்பார் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி என்ன வேடத்தில் நடிப்பார் என்பது அறிவிக்கப்படாவிட்டாலும், அவர் வில்லனாக நடிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த் தற்போது ரஞ்சித் இயக்கிய ‘காலா’ படத்திலும் ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். ‘2.0’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பிற்கு பிந்தைய க்ராஃபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் முடிவடையாததால், ‘2.0’ வெளியாவது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டது, ஆனால், தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தத்தால் இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கவிருப்பதாக அறிவித்திருக்கும் ரஜினிகாந்த், இது தொடர்பான பணிகளிலும் தீவிரமாக இருக்கிறார். அரசியல் கட்சி துவங்கவிருக்கும் நிலையில், அவர் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்திருந்தது.
இந்நிலையில்தான் அவரது புதிய படத்திற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியானது.
அஜீத் நடித்த மங்காத்தா படத்தை துரை தயாநிதி தயாரிக்க, அதனை வெளியிட்டது சன் பிக்சர்ஸ். அதற்குப் பிறகு நீண்ட நாட்களாக படத் தயாரிப்பிலிருந்து விலகியிருந்த அந்த நிறுவனம் தற்போது விஜய்யின் 62ஆவது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தயாரித்துவருகிறது. அதற்கு அடுத்த படமாக, ரஜினியின் படத்தைத் தயாரிப்பதாக அறிவித்துள்ளது.