ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டு, வேலூர் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முருகனை வேலூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முருகன் தொலைபேசி பயன்படுத்துவதாக வேலூர் சிறைச்சாலை காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது, இரண்டு கைப்பேசிகளும், இரண்டு சிம் அட்டைகளும், மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை வேலூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த வழக்கில் தாமே வாதாட அனுமதிக்க வேண்டும் என்று முருகன் கோரிக்கை முன்வைத்த நிலையில், அதற்கான அனுமதி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தாமாக வாதாடிய முருகன், 7 அரசு தரப்பு சாட்சியங்களிடம் குறுக்கு விசாரணை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான குற்றங்கள் அரச தரப்பிலிருந்து நிரூபிக்கப்படாததன் காரணமாக முருகன் சிறைச்சாலைக்குள் கையடக்க தொலைபேசி பயன்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.