ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனை பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் சந்திப்பின்போது சபாநாயகர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை பரிந்துரை செய்துள்ளார் என சபாநாயகர் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன தனது கைப் பொம்மையான அங்கஜனை இவ்வாறு பரதி சபாநாயகர் என்ற பதவியில் இருத்துவதன் மூலம் தமிழர்களுக்கு உயர்பதவிகளும் உரிமைகளும் வழங்கப்படுவதுபோன்ற தோற்றத்தை உருவாக்க முயல்கிறார். ஏற்கனவே தமிழர்களுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாடுகளில் மைத்திரி கூறி வந்த நிலையில் சுதந்திரக் கட்சி உறுப்பினரும், மகிந்தவின் கையாளாக செயற்பட்டு தற்போது மைத்திரியின் கையாள வலம் வரும் அங்கஜனுக்கு இப் பதவி வழங்குவது தமிழர்களை கவிழ்க்கும் மற்றொரு நடவடிக்கை என்று விமர்சிக்கப்படுகிறது.
வரலாற்றில் இவ்வாறு தமிழர்களுக்கு போலிப் பதவிகள் கொடுக்கப்பட்டு தமிழர்கள் ஏமாற்றப்பட்டு வந்தமையை அறியக்கூடியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.