இது நடந்திருந்தால் முள்ளிவாய்க்கால் படுகொலையைப் பார்த்திருக்க மாட்டோம்” – ஈழக்கவிஞர் தீபச்செல்வன்

0

நான் ‍ஸ்ரீலங்கன் இல்லை!

வழிகளைக் கடக்க
என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது
பாலஸ்தீனரின் கையிலிருக்கும்
இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல

சோதனைச்சாவடிகளைக் கடக்க
என்னிடம் ஓர் அடையாள அட்டை இருக்கிறது
ஈராக்கியரிடம் இருக்கும்
அமெரிக்க அடையாள அட்டையைப்போல

செலவு செய்ய என்னிடம்
சில நாணயக் குற்றிகள் இருக்கின்றன
சிரியப் பிரஜையிடம் இருக்கும்
பிரெஞ்சு நாணயக்குற்றிகள்போல

என்னுடைய மண்ணில்
ஒரு தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது
மணிப்பூரில் ஒலிக்கும்
இந்திய கீதம்போல

என்னுடைய மண்ணில்
ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறது
திபெத்தில் பறக்கும்
சீனக்கொடிபோல

என்னுடைய விரலில்
நாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறது
மியான்மரியரின் கையில்
தீயால் இடப்பட்ட காயத்தைப்போல

– என்று தனது சொற்களையே பலம்வாய்ந்த ஆயுதமாகச் சுமந்து திரிகிறார் ஈழத்துக் கவிஞரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வன். இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளையும் போராட்டங்களையும் மக்களின் வாழ்க்கை பாடுகளையும் அரசியல் போக்குகளையும் கவிதைகள், கட்டுரைகள் என்று தனது படைப்புகளின் வழியே தீவிரமாக ஆவணம் செய்து வருபவர் இவர். `சினம் கொள்’ என்ற திரைப்படக் குழுவோடு சென்னை வந்திருந்த தீபச்செல்வனோடு நடந்த உரையாடல் இவை..

“ `சினம்கொள்’ திரைப்படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?”

“சிங்கள அரசின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட போராளி ஒருவன், தன் குடும்பத்தையும் தன் தாய் நிலத்தையும் தேடும் பயணம்தான் `சினம்கொள்’. 2009-க்குப் பிந்தைய காலத்தை எதிர்கொள்ளும்போது அவனுடைய சினமே இந்தப் படம். ஈழ நிலத்தின் கதையை ஈழ நிலத்தில் பதிவு செய்திருக்கிறோம். நிஜ ஈழ நிலத்தை இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கலாம். படத்தை ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ளார். வசனமும் பாடல்களும் நான் எழுதி இருக்கிறேன். பாடல்கள் விஷயத்தில் இயக்குநர் கடுமையாக உழைக்கத் தூண்டியிருந்தார். பாடல்கள் மிகச் செறிவாக வந்திருக்கிறது. சமீபகாலத்தில் குட்டிரேவதி, உமாதேவி போன்ற பாடலாசிரியர்கள் கவனம் ஈர்த்து வருகிறார்கள்.”

“தமிழீழ இனப்படுகொலையையும் அதன் போராட்டங்களையும் தமிழ் சினிமாவில் படமாக்கினால் உண்டாகும் சிக்கல்கள் பற்றி..?”

“ஈழப் பிரச்னையைப் படமாக்க முயன்ற பல இயக்குநர்கள் அதில் தோல்வியையே கண்டனர். இதில் முதன்மையானவர் மணிரத்னம். `கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் சில பாடல்களிலும் காட்சிகளிலும் அழத் தூண்டியிருந்தாலும் ஈழ விடுதலைக்கும் ஈழப் போராளிகளுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது அந்தப் படம். சில படங்கள் ஈழம் தொடர்பான தவறான புரிதலையே ஏற்படுத்தியுள்ளன. `உச்சிதனை முகர்ந்தால்’ மிகையான துயரத்தையும் அனுதாபத்தையும் கோரும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. உண்மையில் எங்கள் கதையை எங்களால்தான் சொல்ல முடியும். ஈழப் படம் எடுக்க முனையும் தமிழக இயக்குநர்கள் முதலில் எங்கள் மண்சார்ந்த அரசியலையும் உணர்வுகளையும் தெரிந்துகொண்டு தங்கள் கதையைச் சொல்ல வேண்டும். நமது மொழியின் உச்சரிப்பை சரிவரச் சொல்ல வேண்டும். ஈழத்தில் ஒரு சினிமா பாரம்பர்யம் இருந்தது. ஈழ சினிமாவில் முக்கியமானவர்களை இணைத்து தலைவர் பிரபாகரன் தமிழீழ சினிமாத்துறையைத் தனித்துவமாகக் கட்டி எழுப்பினார். தொழில்நுட்பரீதியான பிரச்னைகள் இருந்தாலும் எங்கள் மொழியும் எங்கள் கதையும் சரியாக அந்தப் படங்களில் சொல்லப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாகச் `சினம்கொள்’ உருவாகியுள்ளது. இந்த நூற்றாண்டில் நாங்கள் சந்தித்த மிகப் பெரும் இனப்படுகொலை ஈழ இனப்படுகொலை. இதனுள் எண்ணற்ற கதைகள் உண்டு. அதைச் சொல்ல ஈழத் திரைப்பட இயக்குநர்களால்தான் முடியும். அதன் புதியதொரு தொடக்கமாக எங்கள் படம் அமையும்.”

“நாவல்கள், சிறுகதைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் சமீபகாலமாக கவிதைகளுக்குக் கொடுக்கப்படாதது ஏன்?”

“ஆமாம். நாவலுக்கும் சிறுகதைகளுக்கும் உள்ள முக்கியத்துவம் கவிதைகளுக்கு இல்லை. ஒரு நாவல் விற்பனையாகும் அளவுக்குக் கவிதைப் புத்தகங்கள் விற்பனையாவதில்லை. இதழ்களில்தாம் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழ் இலக்கிய மரபின் அதிகமான பண்புகளைக் கொண்டிருப்பது கவிதைதான். ஒரு கவிதையை எளிமையாக எழுதிவிடலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறைந்த சொற்களில் குறைந்த வரிகளில் சொல்லுவது மாத்திரமல்ல கவிதையின் பணி. நிறைந்த சொற்களாலும் விவரிக்க முடியாத வெளியை அடைவதே அதன் பணி. நாவல், சிறுகதையைக் காட்டிலும் கவிதைதான் வாசக மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அப்படியான நல்லதொரு கவிதையை எழுதுவது என்பது எளிதானதல்ல. என்னைப் பொறுத்தவரையில், கவிதை எழுதுவதற்கான மனநிலை என்பதே ஓர் அழுத்தத்துடனே தொடங்குகிறது. அந்தக் கவிதையை எழுதி முடித்தப் பின்னரே அதிலிருந்து நீங்க முடியும். மாதங்கள், வருடங்கள்கூட அது தொடரலாம்.”

“ஆளும் வர்க்கங்கள் மக்களை வதைத்திடும்போதெல்லாம் கலை இலக்கியங்களின் செயல்பாடுகள் எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?”

“மக்களைத் துன்புறுத்தும் அதிகாரத்துக்கு எதிராக இயங்குவதுதான் கலை இலக்கியங்களின் பணியாக இருக்க வேண்டும். தமிழ் நிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் எழுத்தாளர்கள் பலபேர், நுண்மையான தமது எழுத்துகளின் ஊடாக வாழ்வின் எரியும் பிரச்னைகளை மூடிக்கொள்கிறார்கள். விடுதலைப் புலிப் போராளிகளைக் குறைகாணும் விதமான கவிதைகள், நாவல்கள், கதைகள் எழுதுபவர்களுக்கு இருக்கும் ஊடக கவனம் அந்தப் போராளிகளின் ஆன்மாக்களை எழுதுபவர்களுக்கு இருப்பதில்லை. தமிழ் நிலத்தில் பெரும்பாலான மக்கள் தமிழர் நிலம் சார்ந்த ஈர்ப்பு கொண்டவர்கள். ஈழத்தில் 2009 இனப்படுகொலைக்குப் பின்னரான காலத்தில் தமிழ் தேசத்தை வலியுறுத்தும் படைப்பாளிகள் சிறுபான்மையினராக மாறிவிட்டனர். பேருக்காகவும் பாராட்டுக்காகவும் அங்கீகாரத்துக்காகவும் கண்ணை மூடிக்கொண்டு எங்கள் போராட்டத்தையும் போராளிகளையும் கொச்சைப்படுத்துபவர்கள் அதிகமாகிவிட்டனர்.”

தீபச்செல்வன்

“தமிழ் இலக்கியச் சூழலில் இருக்கக்கூடிய குழு அரசியலால் உண்டாகும் பாதிப்புகள் என்ன… குறிப்பாக, ஈழ எழுத்தாளர்களிடையே நிலவக்கூடிய முரண்பாடுகள் குறித்து?”

“விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வளர்ந்திருக்கக்கூடிய படைப்பாளிகள், குழு மனநிலையில் இருந்ததில்லை. உலகத்தின் அனைத்துத் தமிழ்ப் படைப்பாளிகளையும் ஒன்றாக இணைப்பதே அவர்களின் எண்ணம். அண்மையில் வாசு முருகவேல் எழுதிய `ஜப்னா பேக்கரி’யை சில குழுக்கள் தாக்கி எழுதினார்கள். அவர்கள் போராளிகளைக் கொச்சைப்படுத்தி வாழும் எழுத்தாளர்கள். ஒருகாலத்தில் போராளிகளை ஆதரித்து எழுதிவிட்டு, அதன் மூலம் கவனம் பெறாத நிலையில் எதிர்நிலையில் நின்று எழுதி அதை ஓர் அரசியலாகச் செய்பவர்கள். எங்கள் மக்களுக்காகத் தங்களைத் தியாகம் செய்த போராளிகளைக் குரூரமாகச் சித்திரிப்பவர்கள் எந்த முகத்துடன் வருகிறார்கள்? ஜப்னா பேக்கரியையும் நாவலாக, புனைவாகப் பாருங்கள்.

“தமிழகத்தில் நடக்கும் களேபரங்களைக் கவனிக்கிறீர்களா?”

“எவ்வளவு நிலமும் வளமும் அழகும் மக்கள் தொகையும் கொண்ட தமிழகம் எப்படி இருக்க வேண்டியது? ஈழமும் தமிழகமும் நெருங்கியிருக்கும் நிலங்கள். இப்போது சமூக வலைதளங்கள் இன்னமும் நெருக்கமாக்குகிறது. ஈழ நிலவரத்தைத் தமிழக மக்கள் எவ்வாறு பார்த்துக்கொண்டிருக்கிறார்களோ அப்படியே தமிழகத்தின் நிலவரங்களையும் ஈழ மக்களாகிய நாங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.”

“எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி..?”

“ஏற்கெனவே இந்தியா முழுவதும் பட்டியல் இன சமூகத்தினருக்கு எதிராகப் பல வன்முறைகள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டன; நிகழ்த்தப்படுகின்றன. விமர்சனங்களை வைக்கும் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது அந்த மக்களைப் பாதுகாக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வது அந்த மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் செயலாகும். ஈழத்தில் பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் போன்றவை ஊடாக ஈழத் தமிழர்களை அழிப்பதற்கு ஒப்பானது இது. ஈழத்தில் சட்டத்தைப் போட்டு அழிக்கிறார்கள். இந்தியாவில் சட்டத்தை நீக்கி அழிக்கிறார்கள்.”

“இலங்கை – ராமேஸ்வரம் இடையேயான கடல் எல்லைப் பிரச்னைகள் அதிகரிப்பதை பார்த்தீர்களா?”

“ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் அண்மையான இடங்களிடையே ஒரு காலத்தில் நல்ல உறவு இருந்தது. இரண்டு பகுதிகளிலிருந்தும் திருமணம் செய்துகொள்வார்கள். மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் கடுமையான நெருக்கம் இருந்தது. ஈழத்தையும் தமிழகத்தையும் பிரித்தாளவே இதை எல்லைப் பிரச்னை என்று பேசுகிறார்கள்.”

“தற்போது, தமிழகத்தில் நிலவக்கூடிய திராவிடமா தமிழ்தேசியமா என்ற வலுவான வாதங்களும் அதன் செயல்பாடுகளும் பற்றி?”

“ஆரோக்கியமான அவசியமான வாதம் என்றே நினைக்கிறேன். இந்தச் செயல்பாடுகள் தீவிரமடைந்திருந்தால் நாங்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைச் சந்தித்திருக்கத் தேவையில்லை. தமிழீழமும் மலர்ந்திருக்கும்.”

“தமிழகத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தும் அரசியல் நகர்வுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“தலைவர் பிரபாகரனை வைத்து இனத்துக்கான அரசியலையே செய்ய வேண்டும். அதை அரசியல் என்பதைவிட போராட்டம் என்றே சொல்ல வேண்டும். அத்துடன் தனிப்பட்டவர்களின் நலனுக்காகவோ கட்சிகளின் அமைப்புகளின் நலனுக்காகவோ அரசியல் செய்தால் அது மிகவும் தவறானது.”

“தற்போதைய ஈழத்தின் அரசியல் நிலையும் மக்களின் நிலையும் எப்படி இருக்கிறது?”

“தற்போது கத்தியின்றி, துப்பாக்கிகள் குண்டுகளின்றி ஒரு யுத்தம் நடக்கிறது. ஒரு புறம் தமிழ் நிலத்தை சிங்கள தேசம் ஆக்கிரமிக்கிறது. இன்னொரு புறத்தில் நுட்பமாக இனத்தை அழிக்கிறார்கள். தமிழர்களின் உரிமையை மறுத்துக்கொண்டு அரசியல் ரீதியாக வஞ்சிக்கிறது அரசு. விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தக் காரணமாக நிகழ்ந்தவை எல்லாம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இலங்கை அரசாங்கம் இன்றும் இப்படிச் செய்வது கொடுமையானது. சிங்கள அரசு ஈழ மக்கள்மீது ஓர் உளவியல் யுத்தத்தை முன்னெடுக்கிறது. நாங்கள் எத்தனையோ முறை அழிவுகளைக் கண்டு அதிலிருந்து மீண்டு எழுந்தவர்கள். நாங்கள் தலைமுறைகளை யுத்தத்தில் இழந்திருக்கிறோம். மாபெரும் இனக்கொலையையும் சந்தித்துவிட்டோம். ஆனாலும், எங்கள் அடுத்த தலைமுறைகள் தாய்நிலத்தை இழந்தோ விட்டுக் கொடுத்தோ வாழ மாட்டார்கள்.”

Leave A Reply

Your email address will not be published.