”இராணுவத்திற்கு எதிராக புலம்பெயர் அமைப்புகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சர்வதேச அமைப்புகள் பகிரங்கப்படுத்த முயற்சி”

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 38 ஆவது கூட்டத்தொடர் இடம் பெறவுள்ளது. இராணுவத்தினருக்கு எதிராக புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சர்வதேச அமைப்புக்கள் பகிரங்கப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்போது அரசாங்கத்தின் காட்டிக் கொடுப்புக்களும் ஒரு முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்படும் என தேசப்பற்றுள்ள வல்லுநர்களின் அமைப்பின் பேச்சாளர் அட்மிரல் சரத் வீரகேசர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலம் பெயர் தமிழர் அமைப்புக்களின் கனவுகள் ஒரு போதும் நிறைவேறாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளமையானது அரசியல் இராஜதந்திரமாகவே காணப்படுகின்றது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவம் போர் குற்றங்களை மேற்கொண்டனர் என்று மேற்குலக நாடுகள் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர். இவ்விடயம் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் ஐ. நா மனித உரிமை பேரவையின் 37 ஆவது காலக்கிரம கூட்டத்தொடர் இடம்பெற்றது. சர்வதேச அமைப்புக்கள் மற்றும் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களும் இக்குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க பல உத்திகளை கையாண்டது.
38 ஆவது கூட்டத்தொடருக்கு இலங்கையில் இருந்து எவ்வித அமைப்புக்களும் இம்முறை கலந்துக் கொள்ளவில்லை. இது சர்வதேச அமைப்புக்களுக்கு சாதகமாக அமையலாம். ஐ. நா விவகாரத்தில் தேசிய அரசாங்கமும் இதுவரை காலமும் விரைவான தீர்வினை பெற்றுக் கொள்ளும் தீர்மானங்களை செயற்படுத்தாமல மந்தமாகவே செயற்பட்டு வருகின்றது.
மனித உரிமை ஆணையகத்தில் இராணுவத்தினருக்கு எதிராக போர் குற்றங்கள் ஏதும் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பட்டுள்ளமை உண்மைக்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது. அரசாங்கம் போர் குற்றங்கள் தொடர்பிலான விவகாரத்தில் அரசியலை மையப்படுத்தியே செயற்பட்டு வருகின்றது. தெற்கு வாழ் மக்களை அமைதிப்படுத்தும் நோக்கிலே அரசாங்கம் தற்போது ஐ. நா. விவகாரத்தினை கையாண்டு வருகின்றது.
மறுபுறம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் நோக்கங்கள் நிறைவேறாது என்று குறிப்பிட்டுள்ளமை வேடிக்கையாகவே உள்ளது. புலம்பெயர் அமைப்புக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக தேசிய அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளது. இதற்காகவே அரசாங்கம் போர்க்குற்றம் தொடர்பில் மந்தகரமாக செயற்பட்டு வருகின்றது. அரசாங்கம் மேற்கொள்ளும் அரசியல் திட்டங்களுக்குள் மறைமுகமாக புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் நலன்கள் நிறைவேற்ற அடித்தளமிடப்பட்டு வருகின்றது. ஆகவே 38 ஆவது கூட்டத்தொடரில் தேசிய அரசாங்கத்தின் காட்டிக் கொடுப்புக்கள் வெளிப்படும், மேற்குலக நாடுகளின் அமைப்புக்கள் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.