படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவு தினம் இன்றைய தினம் (31) மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர் இராஜேந்திரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், காந்தி சேவா சங்கத்தின் தலைவர் அ.செல்வேந்திரன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மறைந்த ஊடகவியலாளர்கள் அனைவருக்குமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவுச் சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்குரிய துரித நீதி விசாரணை கோரியும், யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் நடாத்தப்பட்டது.
2004ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி காலை அலுவலகத்திற்குச் செல்லும் வெளையில் மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 14 ஆண்டுகள் கடந்தும் இதுவரை அவரது கொலை தொடர்பில் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.