சைட்டம் மாணவர்களின் வயிற்றில் பால் ஊற்றி அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆப்படித்த நல்லாட்சி

0

சைட்டம் என்று அழைக்கப்படும் தெற்காசிய தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கடந்த இரண்டு வருடகாலமாக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதிகளவு பணத்தினை அறவிட்டு குறைந்த கல்வி தகைமை உடைய மாணவர்கள் உள்வாங்கப்படுவதாக குற்றம் சுமத்தி அரச பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மற்றும் இலங்கை அரச மருத்துவர்கள் சங்கம் ஆகியன இணைந்து சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது .

இந்த தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் அரசுக்கு பெரும் தலையிடியாக அமைந்தது .அத்துடன் சைட்டம் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்கும் சுமார் 1000  மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி இருந்தது .

பாதிக்கப்பட்ட சைட்டம் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நீதி வழங்குவதற்கு நல்லாட்சி அரசு முன்வந்துள்ளது .இந்த கல்லூரியில் பயிலும் 982 மருத்துவ பீட மாணவர்களையும் சேர் ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு ( KDU )பல்கலைக்கழகத்தில் இணைப்பதற்கு அமைச்சரவையில் இன்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது .

இது குறித்து கருத்து தெரிவித்த உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச , சைட்டம் கல்லூரி மாணவர்கள் ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைந்து தமது மருத்துவ கல்வியை தொடர்வதற்கு விசேட செயற்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படுவார்கள் .மேலும் மாணவர்களது கல்வித் தகைமை மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னரே அவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார் .

அரசின் இந்த நடவடிக்கையானது சைட்டம் மாணவர்களின் வயிற்றில் பாலினை ஊற்றியுள்ளதுடன் அரச பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச மருத்துவ சங்கத்தினருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் சராசரியாக 150,௦௦௦ மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறுகின்ற போதிலும் 25000 பேர் மாத்திரமே கற்கை பீடங்களுக்கு உள்வாங்கப்படுகின்றார்கள். கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய ஒரு வரப்பிரசாதம் ஆகும் .ஆகவே தனியார் கல்வி கல்லூரிகளின் தரம் உறுதிப்படுத்தப்பட்டு நியாயமான கட்டணம் அறவிடப்படும் பட்சத்தில் தனியார் பல்கலைக்கழங்கள் இலங்கையில் இயங்குவதில் தவறு இல்லை என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர் .

அரசின் இந்த அதிரடி முடிவினை அரச பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் மருத்துவ சங்கம் ஏற்றுக்கொள்ளுமா ?அல்லது அரசின் இந்த முடிவுக்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் குதிக்குமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

Leave A Reply

Your email address will not be published.