நாங்கள் ஏன் இன்றும் தேசியம் கதைக்கிறோம்?

0

மரணத்தின் உச்சதறுவாயில் நின்றபோதுகூட
நாங்கள் எம் போராளிகளை வெறுக்கவில்லை.

ஒரு கூட்டு மரணத்தை எதிர்பார்த்திருந்த எங்கள் விழிகளின் இளஞ்சூட்டு நீர்த்திவலையில் சுதந்திர ஈழத்தின் பிம்பம் நிழலாடிக்கொண்டிருந்தது.

அந்த கோர வெளிகளின் இறுதி நாட்களில் நாங்கள் மீதமிருந்த சினத்தாலும், மீதமிருந்த சன்னங்களாலும் சிங்களரை சபித்துக்கொண்டிருந்தோம்.

உள்ளாடைகளை அவிழ்த்து காலிடையில் ஒட்டியிருந்த மண்துகள்களைக்கூட உதிர்த்துக்காட்டியபடி ஆயுதமுனையில் நின்ற அந்த நாள் ஆயிரம் மரணத்தின் அவமானம்.

இருந்தும் இந்த ஜீவிதத்தின் நாலிலொரு பங்கிற் சிறிதேனும் நாட்டுக்காக கொடுக்கவேண்டும் என்று வந்தவர்கள் பலரும் மௌனமாய் இருக்கிறோம்.

#இன்றும்_அதே_வடுக்களை_சுமந்தபடியே_வாழ்கிறோம்_அதனாலேயே_இன்றும்_தேசியம்_கதைக்கிறோம்.

கால்முழுகச் சதைகள் மலிந்த காடுகளின், கடற்கரைகளின், வீதிகளின், விழா நடந்த கோயில்களின் நினைவுகளை நெஞ்சுக்கூட்டில் சுமந்து வாழ்நாளெல்லாம் வெந்து மனம் வெடித்துச் சாவதற்கே தப்பி வந்தோம்.

களற்றிவிட்ட பாம்புச் சட்டைபோல காற்றில் தூக்கியெறியுமளவு காலியான வயிற்றுடன் கையேந்தி நின்றோம் முகாம்களுள்,
சூத்திரர் என்றும் மூத்திரர் என்றும் சொல்லிச்சிரிக்கையில் மௌனமாயிருந்தோம்.

அஞ்சரிசிப் பஞ்சத்தில் அலைந்தபோதும் எம் புலிகளின் ஆயுதம் சூழ வாழ்ந்த காலம் தன்மான மிடுக்கோடு தலைநிமிர்ந்து வாழ்ந்த காலம்.

இன்றும் குட்டுப்பட்டு வாழ்கிறோம் இந்த குற்ற உணர்ச்சி பலருக்கில்லை,என்ன செய்ய காலகாலமாய் பட்ட அவலத்தின் களைப்பால் வந்த வெறுப்பாகவிருக்கும்.

தேசியம் கதைக்காத வாய்களையும் கதைக்கச் செய்ய சிங்களன் அடுக்குப்பார்க்க தொடங்கிவிட்டான் இது விரைவில் புரியும்.

– அனாதியன்-

Leave A Reply

Your email address will not be published.