மீண்டும் கமல்ஹாசன்

0

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், மீண்டும் ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. ‘பிக்பாஸ்’ முதல் தொடரில் நடிகைகள் ஓவியா, ஆர்த்தி, நமீதா, பிந்துமாதவி, காயத்ரி. நடிகர்கள் ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், கவிஞர் சினேகன், வையாபுரி, சக்தி, கஞ்சாகருப்பு, பரணி உள்பட 15 பேர் பங்கேற்றனர்.
வெளியுலக தொடர்பு இல்லாமல் தனிவீட்டில் இருக்கும் இவர்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சினைகள், உடன் இருப்பவர்களுடன் பழகும் முறை, இவர்களுடைய தினசரி நடவடிக்கைகள் ஆகியவை 100 நாட்கள் ஒளிபரப்பாகின.
கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தனிவீட்டில் இருப்பவர்களின் நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்வார். அவர்களுடன் கலந்துரையாடுவார். அறிவுரைகளை வழங்குவார். வாரந்தோறும் ஒருவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்படுவார்.
இதில் கமல்ஹாசனின், உரையாடல், அறிவுரை, அந்த அந்த நாட்களுக்கு ஏற்ப இடம் பெற்ற அவரது பேச்சு ஆகியவை மிகவும் ரசிக்கப்பட்டது. அரசியல் குறித்தும் பேசினார். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது.
முதல் நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ் கடைசி வரை இடம் பெற்று பரிசை வென்றார். நடிகை ஓவியா உள்பட பலருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமாகின. ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியை நடத்துவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். எனவே, அவர் ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியை நடத்த மாட்டார். சூர்யா, அரவிந்சாமி அல்லது பிரபல ஹீரோ ஒருவர் நடத்துவார் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியை அறிமுகம் செய்வதற்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகள் பெயர் பட்டியல் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. அதன்பிறகு ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறும்.
கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு இந்த நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்கிறார். ஏற்கனவே நடந்த திகழ்ச்சியில் அரசியல் பேசினார். இப்போது அவர் அரசியல் கட்சி தலைவராகி இருக்கும் நிலையில் இன்றைய அரசியல் நிறைகுறைகள் பற்றி அதிகம் பேச வாய்ப்புள்ளது. எனவே ‘பிக்பாஸ் 2’ சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.