மீண்டு எழுந்தது மும்பை…. சீசனில் மூன்றாவது வெற்றி… பஞ்சாபை 6 விக்கெட்டில் வென்றது!
பஞ்சாப்பை வீழ்த்தி மீண்டும் முன்னிலையில் வந்தது மும்பை
இந்தூர்: அடுத்து விளையாடும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால்தான் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வென்றது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 33 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.
இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வெற்றி, 6ல் தோல்வி என, 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் மிகவும் பரிதாபமான நிலையில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.

6லும் வெற்றி தேவை
மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை அணி, மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. அடுத்து ஆடும் 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான், பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு அந்த அணிக்கு கிடைக்கும்.

கலக்கும் அஸ்வின்
இந்த சீசனின் இரண்டு ஐபிஎல் அணிகளின் கேப்டன்களாக தமிழர்கள் உள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக உள்ள பஞ்சாப், துவக்கத்தில் இருந்தே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கேற்றார் போல் கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்துவீச்சிலும் அணி சோடை போகவில்லை.
பஞ்சாப் 174 ரன்கள்
இந்தூரில் நடக்கும் ஆட்டத்தில் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் முயற்சியுடன் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. டாஸை வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 24, கிறிஸ் கெயில், 50, யுவராஜ் சிங் 14, கருண் நாயர் 23, அக்சர் படேல் 13, மயாங்க் அகர்வால் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மார்கஸ் ஸ்டோனில் ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் எடுத்தார்.

அதிசயம் நடந்தது
20 ஓவர்களில் 175 ரன்கள் வெற்றி இலக்குடன் மும்பை பேட்டிங் செய்தது. 19 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 176 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது. இது இந்த சீசனில் மும்பை பெறும் மூன்றாவது வெற்றியாகும். சூர்யகுமார் யாதவ் 57, இஷான் கிஷண் 25, எவின் லூயிஸ் 10, ஹார்திக் பாண்டயா 23 ரன்கள் எடுத்தனர். கேப்டன் ரோஹித் சர்மா 24 மற்றும் குருணால் பாண்டயா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். அதையடுத்து கடைசி இடத்தில் இருந்த மும்பை அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது. பஞ்சாப் நான்காவது இடத்தில் உள்ளது