மே 18 தமிழர் சாம்ராஜ்யம் கூட்டுச்சதியினால் சரிக்கப்பட்ட நாள்

0

மே 18 இன்றைய நாள் தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத கறை படிந்த வடு நிறைந்த வலி மிகுந்த நாள் . முள்ளிவாய்க்கால் முப்பது வருட போராட்டத்தை முப்பது வருட தியாகங்களை , அர்பணிப்புகளை ஓர் நொடியில் கிள்ளி எறிந்து விட்டது .

30 வருட காலமாக தியாகங்களாலும் , அர்ப்பணிப்புகளாலும் கட்டிக்காக்கப்பட்ட தமிழர்களின் சாம்ராஜ்யம் அடியோடு கவிழ்க்கப்பட்ட சோகம் நிறைந்த நாள் இந்நாள் .நாம் வீழவில்லை. காட்டிக்கொடுப்புக்களாலும் கூட்டிக்கொடுப்புகளாலும் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்டோம்.

வெள்ளையர்களால் காலனித்துவ ஆட்சியில் பறிக்கப்பட்ட தமிழர்களின் சுந்தந்திரம் 1948 ம் ஆண்டின் பின்னர் சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம் அடகு வைக்கப்பட்டது .காலத்துக்கு காலம் ஆட்சிகள் மாறின .ஆட்சியாளர்கள் மாறினார்கள் .ஆனால் தமிழர்கள் மீதான அவர்களது மன எண்ணங்களில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை .

தனி சிங்கள சட்டம் , பல்கலைக்கழக உள்நுழைவில் தரப்படுத்தல் என்று அன்று தொடக்கம் தமிழர்கள் மீது அடக்குமுறைகளும் அடாவடிகளும் சிங்கள பௌத்த பேரினவாதிகளால் கட்டவிழ்த்துவிடப்பட்டது .இந்த அடக்குமுறைகளை அன்றையகால,தந்தை செல்வா போன்ற ஒரு சில தமிழ் தலைவர்கள் சாத்வீக முறையில் தட்டிக்கேட்டபோதும் அதில் வெற்றிபெற முடியவில்லை .

சிங்கள ஆட்சியாளர்களின் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்த வேளையில் இனி தமிழர்களுக்கு தனி நாடு தான் வேண்டும் என்று அன்றையகால தமிழ் தலைவர்கள் முடிவெடுத்து தமிழீழ கொள்கையை பிரகடனப்படுத்தினார்கள்.

தனி நாட்டு கோரிக்கையை அன்றையகால தலைவர்கள் பிரகடனப்படுத்தினாலும் அதனை அடைவதற்குரிய பொறிமுறை அவர்களிடம் இருக்கவில்லை.தமிழீழம் என்பது வெறும் பேச்சளவில் மட்டுமே காணப்பட்டது .

தனி நாட்டு கோரிக்கைக்கு செயல்வடிவம் கொடுக்க அன்றையகால இளைஞர்கள் முடிவெடுத்தார்கள் .சாத்வீக வழியில் போராடி எமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாது என்று முடிவு செய்த அன்றையகால இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள்.அவ்வாறு நிர்ப்பந்திக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் தான் தமிழீழ தேசிய தலைவர் திரு.மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

தனி நாட்டு கோரிக்கைக்கு செயல்வடிவம் கொடுக்க அன்று பல இளைஞர்கள் பல்வேறு இயக்கங்களை ஆரம்பித்தார்கள்.ஆரம்பத்தில் அனைத்து இயக்கங்களும் ஒரே நோக்கத்திற்காக ஆயுதம் ஏந்தியிருந்தாலும் காலப்போக்கில் கொள்கையில் இருந்து விலகி தடம் மாறி சென்றார்கள் .அத்துடன் தனி நாட்டினை அடைவதற்குரிய வினைத்திறன் அற்ற தலைவர்களாகவே காணப்பட்டனர் .

வினைத்திறன் அற்ற கொள்கையில் உறுதியில்லாத இந்த ஆயுத குழுக்களின் தலைவர்களுக்கு மத்தியில் ஒரு ஆயுதக்குழுவின் தலைவர் மட்டும் தனித்தன்மை வாய்ந்தவராகவும் கொண்ட கொள்கையில் சற்றும் தளராதவராகவும் ,ஒப்பற்ற வீரம் நிறைந்தவராகவும் , நேர்மையானவராகவும் காணப்பட்டார் .அவர் வேறு யாரும் அல்ல .எமது தமிழீழ தேசிய தலைவர் திரு.வே .பிரபாகரன் அவர்கள் தான் அந்த தலைவர் .அந்த ஒப்பற்ற தலைவரினால் உருவாக்கப்பட்டது தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு .

தனது அக்காவின் திருமணத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட மோதிரத்தினை விற்று முதன் முதலில் தலைவர் ஆயுதம் வாங்கி இயக்கத்தினை உருவாக்கினார் .ஆரம்பத்தில் ஒரு சில இளைஞர்களுடன் மட்டுமே விடுதலைப்புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

மற்றைய இயக்கங்களின் தலைவர்களிடம் காணப்படாத , தலைவர் பிரபாகரன் அவர்களிடம் மட்டுமே காணப்பட்ட தனி சிறப்புகள் அன்றைய கால இளைஞர்களுக்கு தலைவர் மீது தனி மரியாதையை ஏற்படுத்தியது .அதன் காரணமாக பல இளைஞர்கள் தலைவரின் பின்னால் அணி திரண்டார்கள்.

1983 ம் ஆண்டு தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரம் அன்றைய கால தமிழ் இளைஞர்களை கொதிப்படைய செய்தது . எமது உரிமைகளை ஆயுத போராட்டத்தின் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என்ற உணர்வெழுச்சியை தூண்டியது.அதன் காரணமாக மேலும் பல இளைஞர்கள் தலைவரின் வழியில் அணிதிரண்டார்கள்.

அமைதிப்புறா வடிவில் உள்நுழைந்து தமிழர் தாயக பகுதிகளில் அராஜகம் புரிந்து ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இந்திய இராணுவத்தை ஓட ஓட விரட்டியடித்தமை பிரபாகரன் என்றால் யார் என்பதனை உலகிற்கு பறைசாற்றியது . முப்படைகள் கொண்ட ஓர் மிக பெரிய பலம் மிக்க இந்திய இராணுவத்தை வெறும் நூற்றுக்கணக்கான சாரம் கட்டிய காலில் செருப்பு கூட அணியாத போராளிகள் அடித்து விரட்டியமை இந்திய இராணுவ தளபதிகளையே மிரள வைத்தது. திரு.பிரபாகரன் அவர்களின் போர்நுட்பத்தினை கண்டு வியக்க வைத்தது .

ஆரம்பகாலத்தில் ஒரு கொரில்லா இயக்கமாக போராட்டத்தினை ஆரம்பித்த விடுதலை புலிகள் அமைப்பு தலைவர் அவர்களின் அசாதாரண போர்நுட்பத்தினாலும் , அசாதாரண ஆற்றலினாலும் மிகப்பெரிய ஒரு விடுதலை இயக்கமாக தோற்றம் பெற்றது.

1995 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றிய போது தற்காப்பு கருதி வன்னி பகுதிக்குள் விடுதலைப்புலிகள் முழுமையாக பின் வாங்கினார்கள் .அந்த பின்வாங்கல் தான் விடுதலைப்புலிகள் அமைப்பை முப்படைகள் கொண்ட ஒரு பலம் மிக்க இராணுவமாக மாற்ற போகின்றது என்று அன்று யாருமே நினைத்திருக்கவில்லை. விடுத்தலைப்புலிகளை ஓர் இராணுவமாக வளர்த்து விட்ட பெருமை சந்திரிக்கா அம்மையாரையே சாரும்.

1996 ம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் விடுதலை புலிகளால் கைப்பற்றப்பட்ட போது முதன் முதலில் ஆட்லறி விடுதலைப்புலிகளின் கைக்கு கிடைத்தது .அன்றில் இருந்து விடுதலைப்புலிகளின் இராணுவ வளர்ச்சி சடுதியாக உயர்ந்தது .

தலைவரின் அசாதாரண திறமை மற்றும் தலைவரினால் வளர்த்து எடுக்கப்பட்ட வீர தளபதிகள் மற்றும் போராளிகளின் உதவியுடன் விடுதலைப்புலிகள் அமைப்பு முப்படைகள் கொண்ட ஒரு இராணுவமாக தோற்றம் பெற்றது .உலக வரலாற்றில் வான்படை வைத்திருந்த ஒரே ஒரு விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலை புலிகள் மட்டுமே .தமிழர் வரலாற்றில் வான்படை உருவாக்கிய முதலாவது தலைவர் திரு.பிரபாகரன் அவர்கள் மட்டுமே.

ஒரு புறம் முப்படை கொண்ட இராணுவத்தை உருவாக்கி சிங்கள இராணுவத்தை அடித்து துவம்சம் செய்துகொண்டு மறுபுறம் ஓர் அரசாங்கத்தை தலைவர் கட்டியெழுப்பி வினைத்திறன் மிக்க அரசாங்கமாக நடத்தி உலகையே வியப்படைய செய்தார் .ஒருபுறம் இரத்தம் சதை என்று போரின் அகோரப்பிடியில் சிக்கி இருந்தாலும் மறுபுறம் ஊழல் ,இலஞ்சம் ,கொள்ளை ,களவு எதுவும் அற்ற ஒரு நேர்த்தியான அரசாங்கத்தினை திரு.பிரபாகரன் அவர்கள் நடத்தி காட்டினார் .

2001 ம் ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க தாக்குதல் மூலம் மிகவும் பலம் வாய்ந்த ஆனையிறவு படைத்தளத்தினை கைப்பற்றி இலங்கை இராணுவத்தை விட பலம் மிக்க இராணுவமாக இருந்த போது உலகநாடுகள் விடுதலைப்புலிகளை இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு நிர்பந்தித்தன .

2002 ம் ஆண்டு நோர்வே அரசின் அனுசரணையுடன் அமைதி பேச்சு வார்த்தை இடம்பெற்றது . அமைதி பேச்சு என்று ஒருபுறம் இலங்கை அரசு மற்றும் உலக நாடுகள் நாடகம் ஆடிக்கொண்டு மறுபுறம் இலங்கை அரசு தனது இராணுவத்தை பலப்படுத்தும் வேலைகளில் முழு மூச்சாக செயற்பட்டது .உலக வல்லரசு நாடுகளும் அதற்கு உதவி வழங்கின.

அமெரிக்காவின் அன்பு முகம் நோர்வே .அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல் என்று தலைவர் அவர்கள் கூறியிருக்கின்றார் .எப்பொழுதெல்லாம் நோர்வே மூக்கை நுழைக்கின்றதோ அப்பொழுதெல்லாம் போராட்டங்கள் சூழ்ச்சியினால் சிதைக்கப்பட்டு இருக்கிறது என்பது வரலாறு .

விடுதலைப்புலிகளின் வான்படை உருவாக்கம் இந்தியா உள்ளிட்ட உலக வல்லரசு நாடுகளை கிலிகொள்ள செய்தது . விடுதலை புலிகளின் வான்படை தெற்காசியாவின் இஸ்திர தன்மைக்கு பங்கமாக அமையும் என்று இந்தியா கருதியது .

ராஜிவ் காந்தியின் கொலைக்கு பழிவாங்குதல் மற்றும் புலிகளின் வான்படை மீதான அச்சம் என்பவற்றின் காரணமாக விடுதலைப்புலிகளை முற்று முழுதாக அழிப்பதற்கு இந்தியா கங்கணம் கட்டி நின்றது .புலிகளை அழிப்பதற்காக இந்தியா ஏனைய உலக வல்லரசு நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசுக்கு முழுமையான உதவிகளை வழங்கியது .இறுதிப்போரில் நேரடியான இராணுவ பங்களிப்பினை இந்தியா வழங்கி இருந்தது .

முப்பது வருடகாலமாக அளவிட முடியாத உயிர் தியாகங்களினாலும் , ஒப்பற்ற அர்ப்பணிப்புக்களினாலும் கட்டி எழுப்ப பட்ட தமிழீழ சாம்ராஜ்யம் 2009 ம் ஆண்டு 22 நாடுகளின் உதவியுடன் காட்டிக்கொடுப்புகள் மற்றும் கூட்டிக்கொடுப்புகளின் துணையுடன் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்டது .

உலக வரலாற்றில் சமகாலத்தில் ஆயுத போராட்டம் மற்றும் அரசியல் இரண்டினையும் நேர்த்தியான முறையில் மேற்கொண்டது விடுதலைப்புலிகள் மட்டுமே . சோழர் சேர பாண்டிய மன்னர்களுக்கு பின்பு உலக நாடுகளை கிலி கொள்ள செய்து ஒரு நீதியான அரசினை கட்டிக்காத்த ஒரே தலைவர் எமது தேசிய தலைவர் மட்டுமே .

22 நாடுகள் சேர்ந்து எமது முதுகில் குத்தி இருக்கிறது என்றால் நாம் எவ்வளவு பலம் மிக்கவர்காளாக திகழ்ந்தோம் என்று ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும் . உலக நாடுகளையே வியந்து பார்க்க வைத்த ஒப்பற்ற எமது தலைவர் திரு .மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த அதே சமகாலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று ஒவ்வொரு தமிழனும் என்றைக்குமே பெருமை கொள்ளலாம் .
” விதைத்தவர்கள் உறங்கலாம்.ஆனால் விதைகள் உறங்குவதில்லை ”

– ஜெயமதன் –

Leave A Reply

Your email address will not be published.