முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத்த பல களம் கண்ட மூத்த போராளி காக்கா அண்ணை அவர்களை பல்கலைக்கழக மாணவர்கள் புறந்தள்ளி ஒதுக்கி விட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் பலரது தாங்க முடியாத வேதனை உணர்வுகள் வெளிப்பட்ட வண்ணமுள்ளன. அந்த வகையில் மூத்த போராளி காக்கா அண்ணனுடன் சிறையில் கூட இருந்த சு.பிரபா அவர்களது பதிவு பலரையும் பாதித்து கண்கலங்க வைக்கின்றது.
அப்பதிவிலிருந்து,
யார் இந்த காக்கா? ஏன்
அழவேண்டும் அவர்?
நான் காக்கா அண்ணனுடன் பூசா வெலிக்கடையென 2 ஆண்டுகள் சிறைச்சாலையில் இருந்திருக்கிறேன்.
பசீர் காக்கா புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர் தேசியத்தலைவர் பிரபாகரனின் நெருங்கிய சகா ஆரம்பகாலங்களில் இருவரும் ஒரே சைக்கிளில் பயணித்து புலிகள் அமைப்பை கட்டமைக்க பாடுபட்டவர்கள். ஒரே தட்டில் உணவுண்டவர்கள். காக்கா அண்ண போராளியாக இருந்த காலத்தில் பல்வேறு சண்டைகளில் பங்குபற்றிய களமுனை போராளி அத்துடன் ஒரு மாவீரரின் தந்தை ஒரு பிள்ளையை முள்ளிவாய்க்காலில் பறிகொடுத்தவர். இதைவிடவும் அவரைப்பற்றி விரிவாய் எழுத வியத்தகு சம்பவங்கள் இருக்கின்றன அவரின் பாதுகாப்பு கருதி தவிர்க்கிறேன் அவற்றையும் எழுதினால் அவர் காலத்தால் மறக்கப்பட்டுவிட முடியா பொக்கிசம் என்பதை நீங்கள் உணர்வீர்கள் அவரை அறிந்தவர்கள் அதை அறிவார்கள்
இதற்கு அப்பால்
அன்று தொட்டு இன்றுவரை போராட்டத்தையும் மாவீரர்களையும் உயிராய் நினைப்பவர். சிறையில் இருந்த காலங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மற்றும் மாவீரர் நாளில் மெளன விரதம் இருப்பதை ஒரு கடனாக கடமையாக நினைத்து கடைபிடிப்பவர். அதை இன்றும் தொடர்பவர்.
விசாரணையில் கூட எதையும் ஒழித்தோ மறைத்தோ அவர் பேசியிருக்கவில்லை நான் அவரிடம் சொல்வேன் காக்கா அண்ண நீங்கள் பழைய கதைகளையெல்லாம் சொல்லாமல் நான் ஈழநாதம் பேப்பரின் சாதாரண ரிப்போட்டர் என்று சொல்லிப்போட்டு வெளிய போயிருக்கலாம் ஆனால் ஒன்றுவிடாமல் எல்லாம் சொல்லிப்போட்டு இப்ப உள்ளுக்க இருக்கிறீங்க என்பேன்
அதற்கு அவர் போடா இந்த சிங்களவனால் எனக்கு எந்த தண்டனையும் முழுமையா தரமுடியாது ஆயுள் தண்டனை தந்தாலும் ஆகக்குறைஞ்சது 15 வருசம் இருக்கோனும் நான் 15 வருசம் இருப்பன் என்றதில எனக்கு நம்பிக்கை இல்ல ஆகக்கூடினது 10 வருசம் அவ்வளவுதான் எனக்கான தண்டனை அது ஒரு பெரிய தண்டனையா என்று சிரித்துகொண்டே சொல்வார் ஆக அவர் உள்ளே இருக்கும்போது கூட உறுதியோடுதான் இருந்தார் தான் விடுதலை ஆகமாட்டேன் என்ற கொள்கையோடுதான் இருந்தார் தினமும் ஏதாவது குறிப்புகள் எழுதி சேர்த்து வைத்து மாதம் ஒரு முறை பார்க்கவரும் மகளிடம் கொடுத்து ஆவணமாக்கிவைக்கச்சொல்வார்.
இன்று முள்ளிவாய்க்கால் நிகழ்வுசெய்துவிட்டோம் என்று சட்டைக்கொலரை தூக்கிவிடும் தம்பிகளுக்கு ஒரு சின்ன விடயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்
நாம் 2009 ஆண்டுக்கு பின் பூசா, வெலிக்கடை, அனுராதபுரம், மகசின் என சிறைகளுக்குள் பல வருடங்கள் அடைபட்டுக்கிடந்தோம் அந்த கொடிய சிறைச்சாலைக்குள் கூட நாம் முள்ளிவாய்க்கால் நினைவுதினம், கரும்புலிகள் நாள், தியாகி திலீபன் நினைவுநாள், மாவீரர் நாள் என அனைத்து எழுச்சி நாட்களையும் நினைவுநாட்களையும் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியிலும் தடைகளுக்கு மத்தியிலும் கடைப்பிடித்தே வந்தோம்.
தியாகி திலீபன் நினைவுதினத்தில் உணவு தவிர்த்து உண்ணா நோன்பிருந்திருக்கிறோம் சிறைச்சாலைக்குள் உண்ணாநோன்பென்பது இலகுவான விடயமல்ல ஏனெனில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டதென்றும் என்ன என்ன உணவு வழங்கப்பட்டதென்றும் உறுதிப்படுத்தி சிறைக்காவலர்கள் கையொப்பம் இட்டு பிரதான ஜெயிலரிடம் தினமும் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் நாம் உணவை எடுக்காதுவிட்டால் அது சீப் ஜெயிலர் வரைக்கும் போகும் அப்படிப்போய் அவர்கள் வந்து எம்மை வற்புறுத்தி உணவை பெற்றுக்கொள்ள சொல்லும் போதுகூட நாம் மறுத்துப்பேசி அதனால் பல அசெளகரியங்களையும் சந்தித்திருக்கிறோம். ஜெயில் மாற்றப்பட்டிருக்கிறோம் வெளியே திறந்துவிடப்படாமல் அறைகளின் உள்ளே அடைக்கப்பட்டிருந்திருக்கிறோம் மாதம் ஒருமுறை பார்க்க வரும் உறவினர்களை சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பியிருக்கின்றனர் இவையெல்லாம் நாம் இந்த நிகழ்வுகளை கடைப்பிடித்ததால் அனுபவித்த துயர்கள் இதற்காக நாம் அவற்றில் இருந்து ஒதுங்கிவிடவோ அவற்றை கைவிட்டுவிடவோ இல்லை இன்று சிறையில் இருப்பவர்கள் கூட இதை கடைப்பிடித்தே வருகின்றனர் நாம் இன்று முகநூலில் வந்துநின்று வீரம் பேசுபவர்கள் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்
இம்முறை முள்ளிவாய்க்கால் நிகழ்வை நான் செய்வதா நீ செய்வதா என்ற சண்டைகள் ஆரம்பித்த போது அதை சமரசமாக தீர்க்க அழுது தீர்க்கும் இடத்தை அரசியல் மேடையாக்காதீர்கள் என்று கண்ணீர் மல்க எல்லோரிடமும் கோரினார் காக்கா அண்ணா. அத்துடன் நிற்காமல் இந்த வயதிலும் முள்ளிவாய்க்கால் மே – 18 நிகழ்வுக்காக முதல்நாளே அங்கு போய் நின்று எல்லா வேலைகளையும் ஏற்பாடுகளையும் உடனிருந்து செய்துவிட்டு 18 ஆம் திகதி வழமை போன்று மெளன விரதம் இருந்தார்.
அன்று தொட்டு இன்று வரை தேசியத்தில் பற்றுறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்ட அந்த மூத்த மனிதனை ஒரு ஓரமாய் புறந்தள்ளிவிட்டு நேற்றைக்கு முதல்நாள் வடக்கு மாகாணதிற்கு வந்தவரும் எல்லா மாகாணசபை உறுப்பினரும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று சத்தியப்பிரமாணம் செய்ய தனக்கு அதில் உடன்பாடில்லையென்று கூறி தன் சிங்கள சம்பந்தி வாசுதேவ நாணயக்கார சகிதம் மகிந்தவின் காலடி தேடிச்சென்று மகிந்தவின் முன் நின்று சத்தியப்பிரமாணம் செய்த முதல்வர் விக்கினேஸ்வரனை கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் நினைவஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தது தமிழர் வரலாற்றில் ஒரு கறுப்பு தினம் என்றே சொல்லவேண்டும். இறந்துபோன அந்த மக்களின் ஆத்மாக்கள் கூட இச்செயலை மன்னிக்காது.
அரசியலுக்கு அப்பால்ப்பட்டு நிகழ்வை ஒழுங்கமைக்கிறோம் என்று கூறிய பல்கலைக்கழக வீரர்கள் அரசியலுக்கு அப்பால்ப்பட்ட மூத்தவர் காக்கா அண்ணாவைக்கொண்டு அந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்திருக்கவேண்டியதுதானே அறம். அவருக்கு என்ன தகுதி இருக்கவில்லை அந்த நிகழ்வை ஆரம்பித்து வைக்க? முதல்வருக்கு என்ன தகுதி இருந்தது ஆரம்பித்து வைக்க? அவர் தன் பிள்ளையை முள்ளிவாய்க்கால் மண்ணில் இழந்தாரா? இல்லை இந்த தேசம் மீட்க போராடினாரா? இல்லை பலவருடங்கள் சிறையில் இருந்தாரா? என்ன தகுதி இருக்கிறது?
பல்கலைக்கழக மாணவர்கள் என்ற பெயரில் இனியும் இவ்வாறான கேலிக்கூத்துக்கள் ஆடுவதையும் அரங்கேற்றப்படுவதையும் எம் சமூகம் அனுமதிக்கக்கூடாது எம் இனத்திற்காய் சிலுவை சுமந்தவர்களை புறந்தள்ளிவிட்டு மீட்சிகளை தேட முயற்சிக்க கூடாது. இந்த நாட்டுக்காக போராடிய ஒவ்வொறுவனும் மதிக்கப்படவேண்டியவனே இன்று நீங்கள் படிக்கவும் பண் எடுக்கவும் திரியும் வயதில் அவர்கள் பசி தூக்கம் மறந்து களத்தில் நின்றவர்கள் அவர்கள் ஒன்றும் அநாதைகள் அல்ல இந்த தேசத்தையும் இனத்தின் மாண்பையும் கட்டமைத்தவர்கள் இவர்களின் ஈகங்களால்தான் எங்கள் அடையாளம் இன்றுவரை நின்று நிலைக்கிறது.
மூத்தபோராளிகள் வெளியில் நிற்கவைத்துவிட்டு நேற்றுப்பிறந்தவர்கள் நாட்டாமை செய்ய வெளிக்கிடுவது காலப்பிழையென்றே கருதவேண்டியிருக்கிறது. ஒரு போராளி கண்ணீர் விடுவது சாதாரண நிகழ்வல்ல அதுவோர் பெருந்துயர் அத்துயரில் அவர்களை ஆழ்த்தாதீர்கள் காலம் உங்களை மன்னிக்காது… தம் எதிர்கால அரசியலுக்காக இவற்றையெல்லாம் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்த அரசியல்வாதிகளை கையாலாகாதவர்கள் என்றே நான் சொல்வேன்.
வேதனையுடன்:- சு.பிரபா
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
