அதிபரின் மனித தன்மையற்ற அடாவடியான கடும் நெருக்கீடு காரணமாக மனமுடைந்து ஆசிரியை ஒருவர் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஆசிரியை நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு குமுழமுனையை பிறப்பிடமாகவும் யாழ். திருநெல்வேலியை வசிப்பிடாகவும் கொண்ட கொஜெயசீலன் கவிதா (வயது-40) என்ற தமிழ் பாட ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியிலுள்ள கலவன் பாடசாலை ஒன்றில் நீண்ட காலமாக குறித்த ஆசிரியை கடமையாற்றியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாடசாலையின் அதிபர் ஆசிரியையை பழிவாங்கும் நோக்குடன் தொடர்ச்சியாக பல நெருக்கீடுகளைக் கொடுத்துவந்ததன் விளைவாக ஆசிரியை அப்பாடசாலையிலிருந்து கடந்த வாரம் இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.
எனினும் குறித்த அதிபரால் ஆசிரியைக்குரிய ஆவணங்களை வழங்க மறுக்கப்பட்டதுடன், இடமாற்றம் பெற்றுச் சென்றாலும் தனது பாடசாலைக்கு வந்து மாலை நேரத்தில் கற்பிக்க வேண்டும் என்று நெருக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த பாடசாலையில் ஆசிரியை கடமையாற்றியதை உறுதிப்படுத்தும் சம்பள படிவம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை உறுதிப்படுத்தி வழங்காது நிறுத்தியுள்ளார்.