வடகொரியா அதிபரை சந்தித்து பேசுவதற்கான தேதி மற்றும் இடம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நடத்தி வந்த நிலையில் இனி மேல் அணு ஆயுத சோதனைகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்தார். வடகொரிய அதிபரின் இந்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரவேற்பளித்தார். வடகொரியாவுக்கு மட்டுமின்றி உலகிற்கே இது நல்ல செய்தி என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டெனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இருவரும் சந்தித்து பேசுவதற்கான தேதி மற்றும் இடம் முடிவு செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங்கை சந்தித்து பேசுவதற்கான தேதி மற்றும் இடம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியா மற்றும் தென்கொரியா அதிபர்கள் சந்தித்து, கொரிய தீபகற்பத்தில் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.