17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமான நாள் இன்று!

0


புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தை 1972 ஆம் ஆண்டில் வே. பிரபாகரனால் இலங்கை அரசின் தமிழர் மீதான அடக்கு முறையையும் அதன் சிங்கள பௌத்த பேரினவாதத்தை வன்முறை மூலம் எதிர்பதையும் தமிழருக்கான தமிழீழம் ஒன்றை அமைப்பதையும் நோக்காகக் கொண்ட புரட்சிகர அமைப்பாக தலைவர் பிரபாகரன் தொடங்கினார். இவ் இயக்கத்தின் பெயர் 1976 மே 5 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் என் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இலங்கை அரசுகள் தமிழர் மீதான அடக்கு முறைகளையும் தமிழரை புறக்கணிக்கும் நடவடிக்கைகளையும் புரிந்து வந்தது. சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்திய பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம் மற்றும் அதை தொடர்நத பல ஒப்பந்தங்கள் மூலம் இந்தியத் தமிழர்களை நாடு கடத்தியது. இச்செயல் இலங்கையில் இனச் சதவீதத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது.

மேலும் மகாவலி, கல்லோயா போன்றத் குடியேற்றத் திட்டங்களின் மூலம் வட கிழக்கிந் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களைவர்களைக் குடியேற்றியதன் மூலம் அப்பகுதிகளில் தமிழர் சதவீதம் குறைக்கப்பட்டது. சிங்களத்துக்கு முன்னுரிமை வழங்கும் சிங்கள மட்டும் சட்டம், 1956,1958 ஆண்டு இனக் கலவரங்கள் மேலும் 1970 இல் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் திட்டம் மூலம் இலங்கை பல்கலைக்கழகம் செல்லும் தமிழ் மாணவகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் இலங்கை அரசின் மீது வெறுப்பை கொண்டிருந்தனர்.

காந்திய அகிம்சை கோட்பாடுகளை கைக்கொண்டு வந்த தமிழ் கட்சிகளின் அகிம்சைப் போராட்டங்களும் பலனற்றுப் போயிருந்தது. 1957 இன் பண்டா செல்வா ஒப்பந்தம் கிழிக்கப்படுதல் போன்றச் செயற்பாடுகளால் மக்கள் தமிழ் அரசியல் தலைமைகளையும் நம்ப மறுத்தனர். இதன் விளைவாகத் தமிழ்ப் பகுதியில் அரசியல் வெற்றிடம் ஒன்று தோன்றியிருந்தது. புரட்சிகர அரசியல் அமைப்பு ஒன்றின் தேவை தமிழர் தரப்பால் உணரப்பட்டது. இந்த நிலையில் தமிழ் மாணவர் பேரவை என்ற மாணவர் இயக்கம் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலங்கை அரசு கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்களைத் தமிழ் மாணவர் பேரவை நடாத்தியது.

தமிழ் மாணவர் நடுவே பெரும் சக்தியாக இப்பேரவை வளர்ந்தது. இவ்வமைபின் முக்கியமானவராக வே. பிரபாகரன் இயங்கினார். தொடக்க காலத்தில் கைக்குண்டுகள் செய்வதற்கும் துப்பாக்கியால் சுடுவதற்கும் தாமாகவே பயிற்சி பெற்றது பேரவை. இக்கால கட்டத்தில் அரசாங்கத்திற்குத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அரச பேருந்து ஒன்றை எரிப்பது என்ற முடிவை பொறுப்பேற்றுக் கொண்டு 16 வயதான தலைவர் வே. பிரபாகரன் நான்கு பேர் சென்றார்கள். ஆனால் மற்றவர்கள் மூவரும் நடுவிலேயே அச்சமிகுதியால் திரும்பி ஓடி விட்டார்கள். வே. பிரபாகரன் மட்டும் சென்று அரச பேருந்தைக் கொளுத்தி விட்டுத் திரும்பி வந்தார். பிரபாகரனின் இந்தத் துணிவும், ஆற்றலும் அனைவரையும் கவர்ந்தன.

தமிழ் மாணவர் பேரவையின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்த இலங்கை அரசு அதை ஒடுக்குவதற்கு முயன்றது. தமிழ் மாணவர் பேரவை இளைஞர்கள் சிலரை இலங்கை காவற்துறையினர் கைதுசெய்து சித்திரவதை செய்தனர். இதனையடுத்து தலைவர் வே. பிரபாகரன் தமிழகத்திற்கு சென்றார்.

புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பு தொடக்கம்

வே. பிரபாகரன் தமிழகத்தில் இருந்து 1972 ஆன் ஆண்டின் தொடக்கப் பகுதியில் யாழ்ப்பணம் திரும்பினார். ஆங்காங்கு அரசுக்கு எதிராக போராடும் நோக்கில் சிதறுண்டு இருந்த இளைஞர்களை ஒன்றுச் சேர்த்து 1972 ஆன் ஆண்டின் நடுப்பகுதியில் வே. பிரபாகரன் அவரது 17வது வயதில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பைத் தொடங்கினார். இவ்வமைப்பு மிகக் கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டது.

புதிய தமிழ்ப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கையாக, 1975 ஜூலை 27 ஆம் நாள் அன்று பொன்னாலை வரதராஐப் பெருமாள் கோவிலுக்கருகில் அப்போதைய இலங்கை சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும், யாழ்நகரத் தந்தையுமான அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தாக்குதலை தலைவர் வே. பிரபாகரனே மேற்கொண்டதாக பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தெரிவித்தது.

புதிய தமிழ்ப் புலிகளின் அடுத்த முக்கிய நடவடிக்கையாக புத்தூர் மக்கள் வங்கிக் கிளை தாக்குதல் கருதப்படுகிறது. இயக்கத்தின் தலைமறைவு வாழ்க்கைக்கும் அதனைக் கட்டியெழுப்புவதற்கும் தேவைப்பட்ட நிதியை சேர்க்கும் நோக்கில் 1976 மார்ச் 5 ஆம் நாள் இலங்கை அரசுக்குச் சொந்தமான புத்தூர் மக்கள் வங்கிக்குள் பகலில் வே. பிரபாகரன் தலைமையில் 5 இலட்சம் ரூபாவையும் நகையாக 2 இலட்சம் ரூபாவையும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

தமிழின, தமிழ் நில அழிப்பில் ஈடுபட்டு வந்த இலங்கை அரசு இவைகளைத் தொடர்ந்து , புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தை அழித்தொழிக்க வடக்கில் ஒரு விசேட உளவுப் படையின் பிரிவு அமைத்தது. சிங்கள அரசின் எந்த நாசகாரச் செயல்களுக்கும் சிக்காமல் வீறு கொண்டு வளர்ந்தது புலிகள் இயக்கம்.

தமிழீழ விடுதலைப் புலிகளாக

அந்த வகையில், புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் 1976 மே 5 ஆம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தமிழர்கள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில் சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு வே. பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.

தலைவர் பிரபாகரன் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழத் தமிழ் இனத்தின் முகவரியாக மாத்திரமின்றி உலகத் தமிழ் இனத்தின் முகவரியாகவும் நிலைத்துவிட்டது. காலம் காலமாக ஆண்டு வந்த தமிழன் அடிமைப்பட்டு கிடந்த நிலையில் தமிழ் தேசங்களின் எழுச்சியை இவ் இயக்கத்தின் வழியே மீட்டெடுத்தார் தலைவர் பிரபாகரன்.

Leave A Reply

Your email address will not be published.