- பிரதிசபாநாயகர் பதவிக்கு ஆப்பு வைத்த சுமந்திரன்மீது அங்கஜன் கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் 48 ஆண்டுகளின் பின்னர் தமிழர் ஒருவர் பிரதி சபாநாயகர் பதவிக்கு வருவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்றும் தனது ஆற்றாக் கவலயை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதற்காக கடுமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உழைத்தாகவும் முக்கியமாக சுமந்திரன் இரவு பகலாக கடும் பணியாற்றியதாகவும் கூறியுள்ளார் யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன. ஸ்ரீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பாராளுமன்ற உரையில் கூட்டமைப்பின் எதிர்ப்பு காரணமாகவே தாம் பதவிக்கு நியமிக்கப்படடவில்லை என்பதை தெரிவித்துள்ளதாகவும் அங்கஜன் கூறியுள்ளார்.
அங்கஜன் அவர்களே! தமிழர்களின் பெயரால் நீங்கள் மிளகாய் அரைக்கத்தேவையில்லை. அதுசரி, 48 ஆண்டுகளின் பின்னர் நீங்கள் பிரதி சபாநாயகர் ஆகி என்ன செய்யப் போகிறீர்கள்? தமிழர்களுக்கு என்ன இலாபம்? 32ஆண்டுகளின் பின்னர் தமிழர் ஒருவர் எதிர்கட்சியாகி என்ன பயன்? தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக இருந்து தமிழர்களுக்கு என்ன பயன்?
தமிழர்களை சாட்டி நீங்கள் பதவிக்கு அலையாதீர்கள். முன்னைய காலம்போல், மகிந்தவுக்கு அடிவருடியாக இருந்து, மைத்திரிக்கு அடி வருடியாக இருந்து பதவிகளைப் பெறுங்கள். தமிழர்களாகிய நாங்கள், சிங்கள அரசின் மைகக்கூலிகளாக, அடிவருடிகளாக இருந்து, பதவிகளுக்கு அலைவதற்காக போராடவில்லை. எங்கள் மக்கள் விடுதலைக்கும் உரிமைக்கும் தேசத்திற்கும் போராடியவர்கள்.
உங்கள் தேர்தல் பிரசாரத்தில் எங்கள் விடுதலைப் பாடல்களைப் பயன்படுத்துகிறீர்கள். மைத்திரி, மகிந்தவின் கால்களை துடைத்துக் கொண்டு எனது தலைவரும் பிரபாகரன் என்கிறீர்கள். முள்ளிவாய்க்கால் படுகொலையை நடாத்திய சிங்கள அரசில் இருந்து கொண்டு உங்கள் அலுவலகத்தில் முள்ளிவாய்க்காலுக்கு விளக்கேற்றுகிறீர்கள்.
இதெல்லாம் இந்தப் பதவி அரசியலுக்கு என்பது எங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.எங்களை கொன்ற மகிந்த செய்யும் அநியாயங்களைக் காட்டிலும் நீங்கள் செய்வது கொடிது. எங்களை கொன்றவனுடன் நின்றுகொண்டு எங்களின் பெயரால் பதவிகளை பெற்று வாழ நினைப்பது மிகக் கேவலமான பிழைப்பென்பதை சொல்லி வைக்க விரும்புகிறோம்.