அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை உடனடியாக விடுவிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார் .
நேற்றைய தினம் கிளிநொச்சியில் சிறுவர்களை பாதுகாப்போம் என்ற தேசிய செயற்திட்ட மாநாடு இடம்பெற்றது .இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரியிடம் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்துரையாடியிருந்தார் . ஆனந்த சுதாகரனின் மனைவி உயிரிழந்துள்ளமையினால் இரு பிள்ளைகளும் பெரும் கஷ்ட்டங்களை அனுபித்து வருவதனால் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.
முதலமைச்சரின் கோரிக்கைக்கு பதிலளித்த மைத்திரி ,ஆனந்த சுதாகரனைப் போல் பலர் சிறையில் உள்ளனர். இவரை விடுவித்தால் அவர்களும் தம்மை விடுவிக்குமாறு கோருவார்கள். இதனால் உடனடியாக இதற்கு இடமளிக்கமுடியாத நிலை காணப்படுகின்றது என்று கூறியுள்ளார்.
ஆனந்த சுதாகரனை பிள்ளைகள் அடிக்கடி சென்று பார்க்கக்கூடிய வகையில் அருகில் உள்ள சிறைச்சாலை ஒன்றிற்கு மாற்றுமாறு முதலமைச்சர் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளார் .
தமது அம்மாவை பறிகொடுத்து அரவணைப்பு இன்றி வாழும் அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு ஜனாதிபதியின் கருத்து பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .கடந்த தமிழ் சிங்கள புத்தாண்டு அன்று தமது அப்பாவை மைத்திரி விடுவிப்பார் என்று பிள்ளைகள் இருவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த போதும் அவர்களை மைத்திரி ஏமாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது .