கிளிநொச்சி சிவில் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக கேணல் ரத்னப்பிரிய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. இராணுவ மயமாக்கலுக்காகவே இந்த நாடகம் இடம்பெற்றதா என்றும் கேள்விகள் எழுப்பட்டுள்ளன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் சிவில் பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக இருந்த கேணல் ரத்னப்பிரிய பந்து கடந்த வாரம் மீண்டும் இராணுவத்துக்கு திருப்பியழைக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்கள் கண்ணீர் வடித்தபடி அவருக்கு பிரியாவிடை வைபவம் செய்ததாக காடிணொளிகள் வெளியிடப்பட்டன.
கேணல் ரத்னப்பிரிய தனது தாய் ரெஜிமெண்ட் தலைமையகமான அம்பேபுஸ்ஸ ராணுவ முகாமில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த பின்னரும் அவரை மீண்டும் கிளிநொச்சிக்கு நியமித்துத் தருமாறு பொதுமக்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் கேணல் ரத்னப்பிரிய மீண்டும் கிளிநொச்சி, முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.