கழுத்து நெரித்து கொல்லப்பட்ட 6 வயது சிறுமியின் விசாரணையில் தொடரும் சர்ச்சை ! கதறியழுத தந்தை

0

கடந்த 25 ம் திகதி யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் ரெஜினா என்ற ஆறு வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலின் பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார் .இந்த கொலை தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது .

வீட்டிலிருந்த சிறுமி ரெஜினாவின் பாடசாலை சீருடையொன்றையும், பாதணியொன்றையும் பொலிஸார் வாங்கிச் சென்றதாக ரெஜினாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.யாழ். சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவுக்கு நீதி கோரி நேற்று காலை முதல் தொடர் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த போராட்டத்தில் வைத்து ரெஜினாவின் தந்தை இந்த விடயத்தை தெரிவித்து கதறியழுதுள்ளார்.எமது வீட்டில் உடுப்பு காயப்போடும் கொடியில் ரெஜினாவின் இன்னொரு பாடசாலை சீருடை இருந்தது. அதனையும், ஒரு பாதணியையும் பொலிஸார் வாங்கிக் கொண்டு போனதாக என் மகன் கூறினார்.

ரெஜினா பாடசாலைக்கு அணிந்து சென்ற சீருடை வழமையாக போடப்படும் துணியில் தைக்கப்பட்ட சட்டை. ஆனால் வீட்டிலிருந்த சட்டை பட்டர் சில்க் துணியால் தைக்கப்பட்டது.வீட்டிலிருந்த குறித்த சட்டை வெளியிலிருந்த கொடியில் காயப் போடப்பட்டிருந்தது. அந்த சீருடையை தான் பொலிஸார் வந்து எடுத்துக் கொண்டு போனார்கள்.

மேலும் வீட்டிலிருந்த பழைய பாதணியையும் எடுத்துச் சென்றுள்ளனர். ரெஜினாவுக்கு குறித்த பாதணியை போட முடியாது போய்விட்டதால் அதை வைத்து விட்டு வேறு பாதணியொன்றை வாங்கிக் கொடுத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் 3 குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வரும் போதும் சிறுமியின் வீட்டிற்குச் சென்று வேறு சீருடையையும் பாதணியையும் பொலிஸார் பெற்றதாக கூறும் விடயம் இடம்பெறவில்லை என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

யாழ். பொலிஸ் சிரேஸ்ட அத்தியட்சகர் இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸ் அதிகாரியொருவரை அப்பகுதிக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.