இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் சிங்கள பேரினவாதிகளினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்னை விடையின்றி தொடர் கதையாக நீண்டு செல்கின்றது .காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொண்டு வந்தாலும் நல்லாட்சி அரசு பாராமுகமாகவே இருக்கிறது .
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் மனோ கணேசன் அரசாங்கத்திற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளார் .
இது தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், யுத்தம் முடிந்து ஏறக்குறைய பத்து வருடங்கள் முடிந்து விட்டன. இன்னமும் இந்த காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை, மீண்டும், மீண்டும் நடத்தி, ஏற்கனவே விரக்தியின் எல்லைக்கு போய்விட்ட இம்மக்களை, அழவிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார் .
மேலும் இந்த காணாமல் போனோர் கணக்கெடுப்புகள் எத்தனை முறை நடந்துவிட்டன? மீண்டும் நடைபெறும் கணக்கெடுப்புடன் அதற்கு சமாந்திரமாக, குடும்ப தலைவர்களை இழந்த பல்லாயிரம், பெண்களுக்கும், நிர்க்கதியாகிவிட்ட குழந்தைகளுக்கும், முதியோருக்கும், கணிசமான நஷ்டஈட்டு தொகைகள் வழங்கப்பட வேண்டும். எந்த ஒரு நஷ்ட ஈட்டு தொகையும், காணாமல் போன உறவுகளை மீண்டும் கொண்டு வராது. இழந்த உறவுகளுக்கு அது ஈடாகாது. இது எவரையும் விட எனக்கு நன்கு தெரியும். ஆனால், இந்த கணிசமான நஷ்ட ஈட்டு கொடுப்பனவுகள், இந்த நிர்க்கதியான மக்களின் வாழ்நிலைமைகளை கொஞ்சமாவது தூக்கி நிறுத்தும். இந்த நஷ்டஈட்டு வழங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் உதவ தயாராக இருப்பதும் எனக்கு தெரியும். ஆகவே இனியும் தாமதிக்க வேண்டாம். இதை இழுத்துக்கொண்டே போனால், இன்னும் இரு வருடங்களில் எமது அரசு முடிவுக்கு வந்து, இதைக்கூட செய்ய முடியாமலேயே போய் விடும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் .