காலா – கமர்ஷியல் படமுமல்ல அரசியல் சினிமாவுமல்ல! குங்குமம் ஆசிரியர் சிவராமன்

0

ஒரு புறத்தில் தன் தவறான பேச்சால் அரசியல் சர்ச்சையில் மாட்டிக் கொண்ட ரஜினிக்கு மற்றுமொரு சோதனை வந்துள்ளது. அவர் நடித்த காலா படம் பற்றி பல்வேறு எதிர்பார்ப்புக்கள் வெளிவந்த நிலையில் அந்தப் படத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி வருகிறது. இந்த நிலையில் காலா படம் பொருட்படுத்தக்கூடிய படமே அல்ல என்று குமுதம் ஆசிரியர் சிவராமன் முகநூலில் எழுதிய பதிவு இது.

* நானா (படேகர்) யார்? எம்.எல்.ஏ.வா, மாநில / மத்திய அமைச்சரா, ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்துபவரா?

* 40 ஆண்டுகளாக தாராவியில் கரிகாலன் என்ன செய்து கொண்டிருந்தார்? அம்மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம்… என ஏதாவது ஒன்றுக்காக பாடுபட்டாரா? குறைந்தபட்சம் முயற்சியாவது செய்தாரா? எதையும் செய்யாமல் இருக்கும் கரிகாலனின் பின்னால் ஏன் மக்கள் அணிதிரள்கிறார்கள்?

படம் முழுக்க இப்படி ஏராளமான கேள்விகள். ‘நாயகன்’ பட கதையாடலுக்கும் ‘காலா’வுக்கும் பல தொடர்புகள் இருக்கின்றன. முந்தையதில் வேலு நாயக்கர் தாராவி மக்களுக்காக அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல காரியங்களை செய்வார்.

‘காலா’வில் ஒரேயொரு காட்சியில் கூட பகுதி மக்களின் முன்னேற்றத்துக்காக கரிகாலன் எந்த செயலையும் செய்யவில்லை. சிறு புல்லையும் வெட்டவில்லை.

அதனாலேயே மக்கள் அவரை காக்க முயல்வது அந்நியமாக இருக்கிறது.

நிலம் எங்கள் உரிமை என்பது உயிர்த்துடிப்பான விஷயம். இதன் நியாயங்களை நடுத்தர மக்களுக்குப் புரிய வைத்து தங்கள் போராட்டத்தில் அவர்களையும் பங்கேற்கும்படி அடித்தட்டு மக்கள் செய்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

உண்மையான கலைஞனின் பணியும் இந்த நியாயங்களை உறக்கத்தில் இருக்கும் மக்களை எழுப்பி புரிய வைப்பதாக இருக்க வேண்டும்.

கதை எழுதி இயக்கியிருக்கும் பா.இரஞ்சித் இச்செயலை ‘காலா’வில் செய்யவேயில்லை. பார்வையாளர்களுக்கு நியாயத்தை உணர்த்தவேயில்லை.

ஆனால், இவரே தனது ‘மெட்ராஸ்’ படத்தில் அடித்தட்டு உழைக்கும் மக்களின் நியாயங்களை நடுத்தர மக்களும் உணரும்படி செய்திருப்பார். ஒருவேளை அப்பட ஸ்கிரிப்டில் எழுத்தாளர் ஜே.பி.சாணக்யா பங்கேற்றது காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகம் ‘காலா’ பார்க்கும்போது எழுகிறது.

சில அரசியல்வாதிகள் பிரச்னைகளைத் தீர்க்காமல் தங்கள் பிழைப்புக்காக அதை கடைசிவரை பயன்படுத்துவார்கள். இது தொடர்பான போராட்டங்கள் வெற்றியடையக் கூடாது என கவனமாக இருப்பார்கள்.

‘காலா’ அப்படிப்பட்ட ஒரு படம்.

இது தலித் அரசியலையும் பேசவில்லை. நிலம் எங்கள் உரிமை என்ற நியாயத்தையும் எடுத்து வைக்கவில்லை.

கமர்ஷியல் படமும் அல்ல அரசியல் சினிமாவும் அல்ல.

வெற்று பிழைப்புவாத கோஷம்.

-கே.என். சிவராமன், குங்குமம் ஆசிரியர்.

Leave A Reply

Your email address will not be published.