காலா கரிகாலன்… அரசியல்வாதி ரஜினிகாந்த்.. இருவருக்கும் என்ன வித்தியாசம்?

0

-ர.முகமது இல்யாஸ்

அரசியல்வாதி ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு “போராட்டம் போராட்டம்னு நடந்துகிட்டிருந்தா தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்” என்று மிகக் கோபமாக தன் கருத்தை வெளிபடுத்தியிருந்தார். மக்களின் நில உரிமைக்கான போராட்டத்தை மையப்படுத்தி வெளிவந்து இருக்கிறது அவர் நடித்த ‘காலா’ திரைப்படம். ‘காலா’ கரிகாலனும் அரசியல்வாதி ரஜினிகாந்தும் எதிரெதிர் துருவங்களில் இருந்து மக்களைப் பார்க்கிறார்கள்; மக்களோடு எதிரெதிர் முரண்பட்ட கருத்துகளோடு உரையாடுகிறார்கள். மக்கள் கரிகாலனைத்தான் விரும்புகிறார்கள் என்பது அரசியல்வாதி ரஜினிகாந்துக்கும் புரிந்திருக்கும்.

‘காலா’ கரிகாலன் மக்களோடு மக்களாக வாழ்கிறார்; தாராவி மக்களால் ‘காவல் தெய்வமாக’ பார்க்கப்படுகிறார்; மக்களின் உரிமைகளுக்காக போராடி மக்களை வழிநடத்துகிறார்; ’நிலம் உனக்கு அதிகாரம்; நிலம் எங்களுக்கு வாழ்க்கை’ என்று அதிகார மையத்தை நோக்கி குரலெழுப்புகிறார்; தன் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் இழப்புகளை சந்திக்கிறார்; இழந்தாலும் துவண்டுபோகாமல், ’களத்தில் நிற்பேன்’ என்கிறார். மக்களால் தலைவராக ஏற்றுக்கொள்ளப்படுகிறார். மக்கள் போராட்டத்தில், தான் இறந்து போனாலும் ’ஒவ்வொருவரும் காலா தான்’ என்று மக்களை ஊக்கப்படுத்துகிறார். போராட்டம் தான் உரிமைகளை மீட்டுத்தருகிறது என்பதை காலா கரிகாலம் அழுத்தி சொல்கிறார்.

காலா கரிகாலன்

ஆனால், அரசியல்வாதி ரஜினி இதுவரை எந்த மக்கள் போராட்டத்திலும் பங்கேற்றதில்லை. திரைப்படங்களைத் தாண்டி, வெளியில் மக்களுக்கு பல உதவிகள் செய்திருக்கிறார். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வீழ்த்தப்பட முடியாத இடத்தில், ரசிகர்களால் ’சூப்பர்ஸ்டார்’ என்று அன்போடு அழைக்கப்படுகிறார். அவரின் கொள்கை என்னவென்று அவரிடம் கேட்டால், அவருக்கு தலை சுற்றிவிடுகிறது; எனினும் ‘ஆன்மிக அரசியல்’ மூலம் அவர் தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

தங்கள் நிலத்தைக் காக்க ‘காலா’ கரிகாலன் முன்னெடுக்கும் போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது. போராட்டங்களின் மாண்டேஜ்கள். தாராவியில் மட்டும் முதலில் தொடங்குகிறது மக்களின் போராட்டம். பல பகுதிகளிலிருந்து வரும் மக்கள் போராட்டத்தில் இணைகிறார்கள். பாரம்பரியமான பறையிசையும், மேற்கத்திய ராப் இசையும் ஒரே முழக்கத்தை முன்வைக்கின்றன. போராட்டம் மெல்ல மெல்ல மற்ற பகுதிகளுக்கு பரவுகிறது. அடக்க வந்த போலீஸ்காரர்கள் சிலரே போராட்டத்தில் இறங்குவதெல்லாம் அப்படியே மெரினா ரெஃப்ரன்ஸ். அரசு மக்களின் கோரிக்கையை ஏற்க முடிவு செய்கிறது. எனினும் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க மத கலவரங்கள் தூண்டப்படுகின்றன; ‘காலா’ கரிகாலன் அதனையும் தடுக்கிறார். மர்ம மனிதர் ஒருவர் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, அமைதியான போராட்டம் கலவரத்தில் முடிகிறது. இவை அனைத்தும் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களில் அரங்கேறியவை.

ஆனால், அரசியல்வாதி ரஜினிகாந்த் ’ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஊடுறுவியது போல, ஸ்டெர்லைட் போராட்டத்திலும் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர்’ என்று கூறியிருக்கிறார். ’சீருடை அணிந்த காவல்துறையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நாட்டிற்கே பேராபத்து’ என்கிறார் அரசியல்வாதி ரஜினிகாந்த். தான் நடத்தும் போராட்டத்தை ஒடுக்கும் எதிரிகளோடு, நுழையும் காவல்துறையினரையும் தாக்குகிறார் ‘காலா’ கரிகாலன். கரிகாலன் நடத்தும் தாக்குதல்களும் போராட்டத்தில் மக்கள் நடத்தும் தாக்குதல்களும் எதிர்வினை மட்டுமே என்பது அரசியல்வாதி ரஜினிகாந்திற்கு தெரிய வேண்டும். களத்தில் முன்னின்று போராடிய சாருமதியைக் குறிவைத்து, மூன்று காவலர்கள் இணைந்து, ஆடையை உருவி எறிகிறார்கள்; பெண்கள் மீது காவல்துறையினர் நடத்தும் பாலியல் வன்முறைகளின் கதைகள் காஷ்மீரின் குனான் போஷ்பாரா முதல் தமிழகத்தின் வாச்சாத்தி வரை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன; மொத்தத்தில் ”காலா கரிகாலன்” பேச்சுக்கு எல்லாம் எதிர்மறையாக பேசுகிறார் அரசியல்வாதி ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த், காலா

’காலா’ கரிகாலன் மக்களின் தலைவர். அவருக்குப் பின் பெரும் மக்கள் திரள் இருக்கிறது. எனினும் அவர் இரவில் கைது செய்யப்படுகிறார். காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்படுகிறார். தாராவி போன்ற பகுதியின் தலைவருக்கே இந்த நிலை. கடந்த ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 1680 காவல்துறை கஸ்டடி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றைக் குறித்து, அரசியல் ரஜினிகாந்தின் பார்வை விளக்கப்பட வேண்டும். அரசியல்வாதி ரஜினி இத்தகைய காவல்துறையின் வன்முறைகளுக்கு அமைதி காக்கிறார். ‘காலா’ கரிகாலன் எதிர்த்துப் போராடுகிறார் அரசியல்வாதி ரஜினிகாந்த் எதிர்க்கப்பட வேண்டியவர்களுக்காக போராடுகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் ஏற்று நடித்த ‘காலா’ கரிகாலன் மக்களின் உரிமைகளுக்கு குரல்கொடுத்து, மக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறார். அரசியல்வாதி ரஜினிகாந்த் மக்களின் உரிமைப் போராட்டங்களை சமூக விரோதிகளின் ஊடுறுவல், வேலைவாய்ப்பு என்று பேசி, மக்களின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறார். காவிரி, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், அணுவுலை, நியூட்ரினோ, பசுமை வழிச்சாலை என்ற பெயரில் தங்கள் உரிமைகள் பறிக்கப்படும் போது, மக்கள் விரும்புவது, ‘ப்யூர் மும்பை’ திட்டத்தை எதிர்த்த ‘காலா’ கரிகாலன் போன்ற தலைவனைத் தான். அரசின் திட்டங்களை என்னவென்றே அறிவதற்கு முன்னால் ஆதரிக்கும் அரசியல்வாதி ரஜினிகாந்தை அல்ல.

Leave A Reply

Your email address will not be published.