`காலா’ நானா ரீல் வாழ்க்கையில்தான் வில்லன்… ரியல் வாழ்க்கையில் ஹீரோ! ரஜனி?

0

மும்பையில், தெருவோர வியாபாரிகளை அப்புறப்படுத்த மாநகராட்சி முயன்றது. ‘தெரு வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கிக் கொடுக்க முடியாதது மாநகராட்சியின் தவறு. அப்படி இருக்கையில், வயிற்றுப்பாட்டுக்காக உழைக்கும் வர்க்கத்தினரை ஒடுக்க நினைப்பது அநியாயமான செயல்’ என ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. ‘காலா’ படத்தில் சூப்பர் வில்லன்தான் இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர். தான் பிறந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் கலைஞன்!

சிலர், படத்தில் ஹீரோவாகத் தெரிவார்கள். நிஜத்தில், மக்களுக்கு வில்லன் ஆவார்கள். சில நடிகர்கள், திரையில் வில்லனாக இருப்பார்கள். நிஜத்தில் மக்களுக்கு ஹீரோவாக இருப்பார்கள். ‘காலா ‘ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள நானா படேகர், அதில் இரண்டாவது ரகம். மராட்டிய மண்ணைச் சேர்ந்த நானா படேகர், எந்தப் படத்தில் நடித்தாலும் மற்றவர்கள் அவருக்கு ஈடுகொடுத்து நடிப்பது கடினமே. மார்க் ஆன்டனி, நீலாம்பரிக்கு அடுத்தபடியாக ஹரிதேவ் அபயங்கர், பேசப்படும் கேரக்டர் ஆகியுள்ளது. மலையாள நடிகர் திலகனுக்கு மாற்று, இந்த நானா படேகர். பரீந்தா, க்ராந்திவீர், ஆங்கர் போன்ற திரைப்படங்கள், நானா நடிப்பின் உச்சம்.

சினிமாவின்மூலம் பணமும் பொருளும் சேர்த்துவிட்டு, ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றத் துடிக்கும் நடிகர்களுக்கிடையே, சினிமா மூலம் சம்பாதித்ததை மக்களுக்காகச் செலவழித்துவிட்டு, ஒற்றை ஃப்ளாட்டில் வசிக்கிறார் நடிகர் நானா படேகர். மக்கள் பணி என்றால் என்ன என்பதை நானா படேகரிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.

மகாராஷ்டிரத்தில், மராத்வாடா பகுதியில் 2015-ம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி நிலவியது. விவசாய நிலங்கள் வெடித்தன. ஆடுமாடுகள் செத்து மடிந்தன. விவசாயிகள் கொத்துக்கொத்தாக தற்கொலை செய்துகொண்டனர். விவசாயிகள் தற்கொலை, நானா படேகரின் மனதை வெகுவாகப் பாதித்தது. சிலருக்கு மார்க்கெட் இருக்கும் வரைதான் சம்பாதிக்க முடியும். பாலிவுட்டை பொறுத்தவரை நானா படேகர் எவர் க்ரீன் ஹீரோ. ஆனாலும், தன் மாநில மக்களுக்காகக் கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.. மராத்வாடா பகுதியில் நேரடியாக களத்தில் இறங்கினார். சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார். அந்த அறக்கட்டளையின் பெயர், ‘நாம்’. முதல் நாளே அறக்கட்டளைக்கு 80 லட்சம் ரூபாய் கிடைத்தது. ஒரே வாரத்தில் 7 கோடி ரூபாய் திரண்டது. நானா படேகர் என்கிற நடிகருக்கு மராட்டிய மக்களிடையே அத்தனை மவுசு. விருதுமூலம் கிடைக்கும் ரொக்கப் பரிசையும் அறக்கட்டளையில் சேர்த்துவிடுவார்.

இரவு பகலாக விவசாயிகளை நேரில் சந்தித்து, நிதி வழங்கினார். வறட்சி காரணமாக மராத்வாடா பகுதியில் பல கிராமங்களில் மின்சாரம் இருக்காது. இரவு நேரத்தில் செல்போன் வெளிச்சத்தில்கூட நானா படேகர் மக்களுக்கு செக் வழங்கிக்கொண்டிருந்தார் என்று அப்போது மும்பை பத்திரிகையாளர்கள் சொன்னார்கள். ‘உங்களுக்கு தற்கொலை எண்ணம் வருகிறதா… ஒருமுறை என்னை நினைத்துக் கொள்ளுங்கள்’ இந்த வார்த்தையைதான், தான் சந்திக்கும் ஒவ்வொரு விவசாயியிடமும் நானா சொல்லியிருக்கிறார்.

மும்பை, தானே, புனே, நாக்பூர், அவுரங்கபாத் நகரங்களில் ‘நாம்’ அறக்கட்டளை தற்போது இயங்கிவருகிறது. கணவரை இழந்த பெண்களுக்கு மறு வாழ்க்கை அமைத்துக்கொடுப்பது. இளம் பெண்களுக்கு சுய தொழில் கற்றுக் கொடுப்பது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது போன்ற பல்வேறு அறப்பணிகளில் இந்த அமைப்பு ஈடுபடுகிறது. ரீல் வாழ்க்கைக்கும் ரியல் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்துக்கு ‘காலா’ படத்திலேயே உதாரணங்கள் இருக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.