சம்பந்தனும் விக்கியும் ஒரே மேடையில்! விக்கியின் நூலை வெளியிட்டார் சாம்!

பிரிவோமாக இருந்தால் எமது மக்களை அழித்துவிடுவோம்! – சம்பந்தன் ஆலோசனை

0

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதனை விடுத்து பிரிந்து செயற்படுவோமாக இருந்தால் எமது மக்களை நாமே அழிப்பதாக அமையுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுதிய ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற தலைப்பிலான புத்தகம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசம் உதவியதாகவும், அதற்காக தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டத்தை தருவோமென சர்வதேசத்திற்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதாகவும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். எனினும், தீர்வுத் திட்டத்தில் இலங்கை அரசாங்கம் தற்போது பின்னிற்கின்றதென குற்றஞ்சாட்டினார்.

மேலும், விடுதலைப் புலிகளின் காலத்தில்கூட தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பல முன்மொழிவுகளை முன்வைத்ததாகவும், அவற்றில் எதுவும் செயற்படுத்தப்படவில்லையென்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் தார்மீக பொறுப்பு சர்வதேசத்திற்கு உண்டு என்றும் அதனை சர்வதேசம் உணர்ந்துகொள்ள வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதனை செயற்படுத்தாதவிடத்து, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச சாசனத்தை உதாசீனப்படுத்துவதாகவே அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை நாட்டை யார் ஆளவேண்டும் என்பதை தீர்மானிக்கும் வல்லமை தமிழ் மக்களுக்கு உண்டு என்பதை கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் நிரூபித்து விட்டதென சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் மக்கள் தங்களுக்கான தீர்வை அடையவேண்டுமாயின் ஒருமித்து செயற்படுவது அவசியமென வலியுறுத்தினார்.

விக்கியின் நூலை வெளியிட்டு வைத்தார் சம்பந்தன்

June 24th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனின் ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூலை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் வெளியிட்டு வைத்துள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில், முதலமைச்சரிடமிருந்து கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் வெளியிட்டு வைக்க, முதலமைச்சரின் சகோதரி நூலை பெற்றுக் கொண்டார்.

இதன்போது, முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், சம்மந்தனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்தார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் உட்பட பிரதம விருந்தினர்களுக்கு சிறப்பு பிரதிகள், நினைவுப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி. தவராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவவணபவன், த. சித்தார்த்தன், யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், வடமாகாண அமைச்சர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய முன்னணியின் செயலாளர் சிவராசா கஜேந்திரன், என். வித்தியாதரன் உள்ளிட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சமய தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

‘நீதியரசர் பேசுகிறார்’ – சம்பந்தனும் விக்கியும் ஒரே மேடையில்! (2ஆம் இணைப்பு)

வடக்கு அரசியல் விவகாரத்தில் எதிரும் புதிருமாய் பார்க்கப்படும், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் நீண்ட காலத்திற்குப் பின்னர் ஒரே மேடையில் தோன்றியுள்ளனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூல் வெளியீடடு விழா, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் இருவரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து உரையாடுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ள அதே சந்தர்ப்பத்தில், கூட்டமைப்புக்கு எதிராக முதலமைச்சர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில், இன்றைய நிகழ்வு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் இன்று இது தொடர்பில் பேசலாம் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.்


எதிரும் புதிரும் இணையும் ஒரே மேடை!

வடக்கு அரசியல் விவகாரத்தில் எதிரும் புதிருமாய் பார்க்கப்படும், எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தனும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், ஒரே மேடையில் தோன்றவுள்ளனர்.

நீண்டகால இடைவெளிக்குப் பின்னர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொது நிகழ்வு ஒன்றில், ஒரே மேடையில் இருவரும் தோன்றவுள்ளதால் இதுகுறித்த எதிர்பார்ப்பு, மக்களின் மனதில் அதிகரித்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய, ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா, இன்று யாழ்ப்பாணத்தில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நூல் வெளியீட்டு விழாவிலேயே இருவரும் பங்ககேற்கவுள்ளனர். வடக்கு மாகாணசபையின் ஆயுள்காலம் முடிவடையவுள்ள நிலையிலும், அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ள நிலையிலும், இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.