21 வது ஃபிபா உலகக் கிண்ண கால்ப்பந்தாட்ட திருவிழா ரஷ்சியாவில் இடம்பெற்று வருகின்றது .நேற்றைய போட்டியில் நடப்பு சாம்பியன் ஜேர்மனி மற்றும் தென்கொரியா ஆகியன மோதிக்கொண்டன .இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி தென்கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது.
உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன்கள் முதல் சுற்றிலேயே வெளியேறுவது தொடர்ந்து மூன்றாவது முறையாக இடம்பெற்றுள்ளது.
2018 பிபா உலக கிண்ண கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக நடப்பு சாம்பியன் ஜெர்மனி இருந்தது.
நான்கு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள ஜெர்மனி, ஐந்தாவது முறையாகவும் வென்று, அதிக முறை கோப்பையை வென்ற பிரேசிலின் சாதனையை சமன் செய்யும் நோக்குடன் இருந்தது.
எப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனிக்கு முதல் ஆட்டத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் கிடைத்துள்ளது.
மெக்சிகோ 1 – 0 என ஜெர்மனியை வென்றது. தனது இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனி 2-1 என ஸ்வீடனை வென்றது.
நேற்று நடந்த தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் தான், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைக்கு ஜெர்மனி தள்ளப்பட்டது.
ஆனால், பல குளறுபடிகளுக்கு மத்தியில் முழு நேரமும் ஒரு நடப்பு சாம்பியனுக்கான வலுவுடன் ஜெர்மனி விளையாடவில்லை.
கடைசி கட்டத்தில் 2-0 என தென் கொரியா வென்றது. ஜெர்மனி மூட்டையைக் கட்ட வேண்டியதாயிற்று.
உலகக் கோப்பையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்பு சாம்பியன் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளன.
2006 இல் உலகக் கோப்பையை வென்ற இத்தாலி, 2010 இல் முதல் சுற்றில் வெளியேறியது. 2010 இல் வென்ற ஸ்பெயின், 2014 இல் வெளியேறியது.
2014ல் வென்ற ஜெர்மனி, தற்போது முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இதற்கு முன் 1998ல் உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ், 2002ல் முதல் சுற்றில் வெளியேறியது.