தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? -ஜனாதிபதியிடம் மனோ கணேசன் காட்டம்

0

இந்து விவகார பிரதி அமைச்சராக நேற்றையதினம் காதிர் மஸ்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார் .இந்த சம்பவத்திற்கு தமிழ்மக்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது .சமூக வலைத்தளங்களிலும் இந்த இவ்விடயம் பாரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது .

இந்து விவகார பிரதி அமைச்சராக இந்து இல்லாத முஸ்லீம் ஒருவரை நியமித்தமை இந்து சமயத்தினை அவமதிக்கும் செயல் என்று பலரும் தெரிவித்து வரும் நிலையில் இந்த விடயம் தொடர்பாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் நேரடியாக தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் .முஸ்லீம் அல்லாத ஒருவரை இந்து விவகார பிரதி அமைச்சராக நியமித்ததன் மூலம் தமிழ் மக்களை நீங்கள் பலவீனப்படுத்த நினைக்கின்ரீர்களா என்று மனோ கணேசன் அவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் .

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் அவர்கள், இந்து விவகார பிரதி அமைச்சர் தொடர்பில் ஏற்பட்டுள்ள குளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும்.வன்னி மாவட்ட எம்பி நண்பர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும். அதில் பிரச்சினை இல்லை. ஆனால், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாச்சார அமைச்சை பிரித்தெடுத்து, அதை வேறு ஒரு பொருத்தமான அமைச்சுடன் சேர்த்து விடுங்கள்.மீன்வள துறை அமைச்சர், மீனவராகவும், கல்வி அமைச்சர், கல்வி பேராசிரியராகவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இதே விதி மத விவகார அமைச்சுகளுக்கு பொருந்தாது என்று தெரிவித்துள்ளார் .

மேலும் , இஸ்லாமிய மத விவகாரம், அமைச்சர் சுவாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், நான் அதை எதிர்த்து இருப்பேன்.மதம் என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம். இதில் அரசியல் விளையாட்டு கூடாது. அவ்வந்த மத விவகாரங்கள் அவ்வந்த மதத்தை சேர்ந்தவர்களிடம் இருப்பதே பொருத்தமானது.குறிப்பிட்ட அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர், அந்த அமைச்சு கையாளும் மத ஸ்தலங்களுக்குள் செல்ல வேண்டும். மத தலைவர்களுடன் உரையாட வேண்டும். மத உணர்வுகளை, முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஆகவே இன்று நிகழ்ந்திப்பது ஒரு குளறுபடி. எங்களை அவமானப்படுத்திக்கொள்ள இந்த அரசை நாம் உருவாக்க பங்களிக்கவில்லை.இந்து கலாச்சார அமைச்சு இதுவரை, நண்பர் டி. எம். சுவாமிநாதனிடம் இருந்தது போதும். அதை பிரித்து எடுத்து வேறு ஒரு பொருத்தமான் அமைச்சுடன் சேர்த்து விடுங்கள்.நண்பர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும்.இல்லாவிட்டால், இதை தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்தும் செயற்பாடாகவே நாம் கருதுவோம் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் .

இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவரும் இதுவரை வாய்திறக்காத நிலையில் அமைச்சர் மனோ கணேசன் மட்டுமே குரல் கொடுத்துள்ளார் .தமிழர் பற்றிய விடயங்களில் துணிச்சலாக குரல் கொடுத்து வருபவர் அமைச்சர் மனோ கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.