●
நிலம் என்ற சொல்லை
எப்பொழுதெல்லாம்
பகைவன் பயன்படுத்துகிறானோ
அப்போது
கைகளை ஓங்கித்தான் ஆகவேண்டும்
நிலம்
நமது மூதாதையர்களின் தியாகமும் வாழ்வும்
நிலைத்த வரலாறு மட்டுமல்லாமல்
நமது முதுகெலும்புகள் உழைக்கும் இடமும் ஆகும்
மெய்யாகவே தாய்நிலம் மொழியின் பூமி
தமிழ்மொழி வீர வளரிக்கு ஒப்பானது
எதிரியை வீழ்த்திய பின்னும் சுழலும்
மொழிதொழும் மக்களின் வாழ்நிலம் அழியாது
சர்வாதிகாரிகளின் பம்பர ஆணி நிலைக்காது
நிலத்தை சுரண்டுவது நீதியல்ல
ஓர் இனத்தின் நிலம் என்ற உணர்வின் பின் ஒலிக்கும் ஓசை
பல்லாயிரக்கணக்கான யானைகளின் நடையும்
சுழலும் ஆயுதங்களோடு ரத்தம் தெறிக்கும்
சத்தமும் ஆகும்
●
– தேன்மொழி தாஸ்
20.5.2018
தேன்மொழிதாஸ் தமிழக கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர். அநாதி காலம் (2003), ஒளியறியாக் காட்டுக்குள் (2007) , நிராசைகளின் ஆதித்தாய் (2016) , காயா (2017 ) முதலிய தொகுப்புக்களை வெளியிட்டவர். 60இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை எழுதியவர்.