நீட் தேர்வில் தோல்வி – மேலும் ஒரு மாணவி தூக்கு போட்டு தற்கொலை

0

நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத விரக்தியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். #NEET2018 #Subasree #TNStudentSuicide

நீட் தேர்வு தோல்வியால் மேலும் ஒரு மாணவி உயிரை மாய்த்துள்ளார். அது பற்றிய விபரம் வருமாறு:-

திருச்சி 1-வது டோல்கேட் திருவள்ளூவர் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கண்ணன், அரசு பஸ் டிரைவர்.

அண்ணா தொழிற்சங்கத்தில் கிளை தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது மனைவி செல்வி.

இந்த தம்பதிக்கு சுபஸ்ரீ (வயது 17) என்ற மகளும், மிதுன் (13) என்ற மகனும் உள்ளனர். துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்த சுபஸ்ரீ பொதுத்தேர்வில் 907 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். சிறுவயது முதலே டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார்.

நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்பதை உணர்ந்திருந்த சுபஸ்ரீ பிளஸ்-2 தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறாவிட்டாலும் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அதற்காக தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார்.

சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவில் மாணவி சுபஸ்ரீ 24 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் அவரது டாக்டர் கனவு தகர்ந்தது. அப்போது முதல் மிகவும் மன அழுத்தத்துடன் இருந்து வந்தார்.

சுபஸ்ரீயை அவரது பெற்றோர் சமாதானப்படுத்தினர். ஆனாலும் நீட் தேர்வின் தோல்வியில் இருந்து மாணவி சுபஸ்ரீ மீளவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை மகளின் மனதை திடப்படுத்தவும், அவருக்கு தைரியம் ஊட்டவும் முடிவு செய்த பெற்றோர் திருச்சி ஓயாமாரி மயானம் பகுதியில் உள்ள காலபைரவர் கோவிலுக்கு அழைத்து சென்றனர். தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு விட்டு இரவு வீடு திரும்பினர்.


சுபஸ்ரீயின் தாய் செல்வி இரவு உணவு சமைப்பதற்காக சமையல் அறைக்கு சென்றார். தந்தை கண்ணன் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். தம்பி மிதுன் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது திடீரென வீட்டில் இருந்த தனி அறைக்கு சென்ற சுபஸ்ரீ கதவை உட்புறமாக தாழ்ப்பாள் போட்டார்.

இதைப்பார்த்த மிதுன் தனது தாயிடம் சென்று கூறினான். அந்த சமயம் வீட்டிற்குள் வந்த கண்ணன் மற்றும் செல்வி ஆகியோர் கதவை தட்டினர். ஆனால் உள்ளே இருந்து எந்தவித பதிலும் இல்லை. இதனால் பதறியடித்துக் கொண்டு அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தனர்.

சுபஸ்ரீ துப்பாட்டாவால் தூக்கு போட்ட நிலையில் தொங்கினார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற பெற்றோர் அவரை கீழே இறக்கினர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுபஸ்ரீயை ஆம்புலன்சு வேன் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.

சுபஸ்ரீ உடல் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. இன்று உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

காலை 11 மணியளவில் மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் உருகச் செய்தது. தொடர்ந்து திருச்சி ஓயாமாரி மின் மயானத்தில் சுபஸ்ரீயின் உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஓயாமாரி மின்மயானம் வரை இரண்டு அரசு பேருந்துகள் இலவசமாக இயக்கப்பட்டன. இதில் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் மயானத்திற்கு சென்றனர். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாணவியின் தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

சிறுவயது முதலே எனது மகள் டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்யவேண்டும் என்று கூறிவந்தார். அதற்கேற்றவாறு நாங்களும் அவரை ஊக்கப்படுத்தி வந்தோம். பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்திருந்த போதிலும் தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்காக அல்லும் பகலும் படித்தார்.

மாணவி சுபஸ்ரீ தனது பெற்றோருடன் எடுத்துக்கொண்ட பழைய படம்

ஆனால் தேர்வின்போது பதட்டம் அடைந்த அவர் மைனஸ் மதிப்பெண்கள் என்ற முறையை மறந்து அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். இதில் தவறாக அளித்த பதில்கள் மூலம் நீட் தேர்வில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள் பெற்று டாக்டராகும் தகுதியை இழந்தார். இருந்த போதிலும் அவரை நாங்கள் தொடர்ந்து தேற்றி வந்தோம். அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினோம்.

ஆனால் அநியாயமாக தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார். ஆசை, ஆசையாய் வளர்த்த மகளை இழந்து நாங்கள் தவிக்கிறோம். எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாம். இந்த தேர்வால்தான் எங்களது மகளை பறிகொடுத்து விட்டோம். இதுபோன்ற நிலைமை இனிமேலும் எந்த பெற்றோருக்கும் வரக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குளுமூரை சேர்ந்த மாணவி அனிதா பிளஸ்-2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலை செய்தார்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் பெருவளூரை சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார். தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சி மாணவியும் நீட் தேர்வில் தோல்வியால் உயிரை மாய்த்துள்ளார்.

மாணவி சுபஸ்ரீ தற்கொலை குறித்து திருச்சி கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமயபுரம் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #NEET2018 #Subasree #TNStudentSuicide

Leave A Reply

Your email address will not be published.