நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தமிழகத்தில் போராட்டம் நடைபெறும்: முத்தரசன் பேட்டி

0

நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தமிழகத்தில் போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள பெருவளூர் கிராமத்தை சேர்ந்த மாணவி பிரதீபா நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் முத்தரசன் அஞ்சலி செலுத்தினார். அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

கடந்த ஆண்டு நீட் தேர்வால் மாணவி அனிதாவை இழந்தோம். தற்பேது பிரதீபாவையும் இழந்து தவிக்கிறோம். இந்த சம்பவங்கள் மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால் தூண்டப்படுகிறது. கடந்த ஆண்டில் இருந்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்து கட்சியினர், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் போராடி வருகிறோம். நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்போம் என்று கழுத்து அறுக்கிறார்கள். மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. நீங்கள் அவசர சட்டம் போட்டால் விலக்கு அளிப்போம் என்று கூறினர். ஆனால் அடுத்த நாளே உச்சநீதிமன்றம் ஒரு மாநிலத்துக்காக விலக்கு அளிக்க முடியாது என்று தீர்ப்பு கூறப்படுகிறது.

நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவிகள் 2 பேரும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தனர். நீட் தேர்வு மட்டும் இல்லையென்றால் அவர்கள் டாக்டராகி இருப்பார்கள். மேலும் ஒரு மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். நீட் தேர்வை வெளிமாநிலங்களில் எழுத வேண்டும் என்று நிர்பதித்த காரணத்தால் 3 பெற்றோர்கள் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர். இந்தியாவில் தமிழ்நாடு சமூக நீதிக்காக போராடி வெற்றி பெற்ற மாநிலமாக உள்ளது. ஆனால் இன்று சமூக நீதி மறுக்கப்படுகிறது. எனவே நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யும் வரையில் போராட்டம் நடைபெறும்.

நீட் தேர்வு பற்றி எதிர்கட்சி தலைவர் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தபோது நாங்களும் நீட்தேர்வை எதிர்க்கிறோம் என்று ஆட்சியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நீட்தேர்வு விலக்கு பற்றி அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்று இதுவரை தெரியவில்லை. அதனால் தான் நேற்று சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அமைச்சர்கள் இங்கு வந்து பிரதீபாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் செய்யவில்லை. பிரதீபாவின் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பிரதீபாவின் உடன் பிறந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.