பிக்பாஸ் நிகழ்ச்சியை புறக்கணிப்போம் – சினிமா தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு

0

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு வட மாநில தொழிலாளர்களே அதிகம் பயன்படுத்தப்படுவதாக புகார் கூறி ‘பெப்சி’ தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். #BiggBossTamil2 #FEFSI

திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ‘பெப்சி’ அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் ‘பிக்பாஸ்’ டி.வி. நிகழ்ச்சியில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள்.

‘பிக்பாஸ் முதல் பாகத்தின் போதே பெப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கேட்டோம். அப்போது ‘இது வித்தியாசமான நிகழ்ச்சி. தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு பிடிபடாது. எனவே 50 சதவிகிதம் ஆட்களைப் பெஃப்சியிலிருந்தும் மீதிப் பேர் மும்பை ஆட்களுமாக வைத்துக் கொள்கிறோம். அடுத்தடுத்த பாகங்களில் நிச்சயம் நூறு சதவிகிதமும் பெப்சியில் இருந்து பயன்படுத்திக் கொள்கிறோம்’ என்றார்கள்.

அந்தப் பேச்சுவார்த்தையில் நடிகர் கமலின் பங்கும் இருந்தது. ஆனால் 2-ம் பாகத்தில் சொன்னது போல் நடந்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டை விட மோசமாக வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே பெப்சி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதிலும் மும்பை தொழிலாளர்களுக்கு ஒரு மரியாதையும் நம்மூர் ஆட்களுக்கு வேறுவிதமான மரியாதையும் பணியிடத்தில் கிடைப்பதாக தெரிகிறது. கேட்டதற்கு சரியான பதில் தராமல் அடாவடியாகப் பேசுகிறார்கள். எனவேதான் நாங்களும் இதை வெளியில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதிகப்படியாக பெப்சி பணியாளர்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. கோடிக்கணக்கில் பணம் போட்டு தமிழ்நாட்டில் தயாராகிற நிகழ்ச்சியில் நமது மாநில தொழிலாளர்களுக்கு வேலை தருவதில் என்ன பிரச்சினை?. எங்களது கோரிக்கைக்கு அவர்கள் செவி சாய்க்காத பட்சத்தில் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிற கமல் உள்பட அந்த 41 பேரும் (நடிகர் கமல் சம்மேளன உறுப்பினர்) அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கலாம் என முடிவெடுத்து இருக்கிறோம்.

கமல் பல்வேறு காலங்களில் சம்மேளனத்துக்கு ஆதரவு தந்துள்ளார். அவரிடம் நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தினர் பெப்சி ஆட்களையே அதிகம் பயன்படுத்துவதாக தவறான தகவல்களைத் தந்திருக்கிறார்கள். நாங்கள் உண்மை நிலையை அவருக்கு தெரிவித்து விட்டோம். கடந்த முறையை போலவே இப்போதும் தலையிட்டு நல்ல தீர்வைப் பெற்றுத் தருவார் அல்லது எங்கள் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பார் என நம்புகிறோம்.

குஷ்புவின் வேண்டுகோளுக்கு இணங்க அவகாசம் தந்து இருக்கிறோம்.

தவறு செய்த நிறுவனம் மீது சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் செய்து இருக்கிறோம். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் 25-ந்தேதி (நாளை) ஒரு நாள் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு வேலை நிறுத்தம் அறிவித்து இருக்கிறோம். அன்று போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருக்கிறோம்’.

இவ்வாறு அவர் கூறினார். #BiggBossTamil2 #FEFSI

Leave A Reply

Your email address will not be published.