பிபா 21 வது உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்சியாவில் கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது .நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் அணி தென்கொரியாவை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் ‘ஜி’ பிரிவில் இடம்பிடித்துள்ள பெல்ஜியம் பனாமா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் இடைவேளையின் போது ஆட்டம் 0-0 என சமனில் இருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டம் தொடங்கிய 47-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் டிரைஸ் மெர்டன்ஸ் கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
அதைத்தொடர்ந்து பெல்ஜியம் அணியின் ரொமெலோ லகாகு 69 மற்றும் 75-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார். இதனால் 3-0 என பெல்ஜியம் அணி முன்னிலை பெற்றது.
பனாமா அணியினர் இறுதிவரை மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை பெற்றுள்ளது.