பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு அரசை ஆதரித்தீர்கள்?

0

தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கும் சூழல் தற்போது இல்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். இலங்கையின் பிரதான இரு கட்சிகளும் மோதிக் கொண்டிருப்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும் மாவை கூறியுள்ளார். இவர்களுக்கு வரலாற்று அறிவு இல்லையா? அல்லது மகிந்த அணியின் சண்டித்தனத்தை வைத்து, மைத்திரி அரசை காப்பாற்ற முனைகிறார்களா?

இலங்கையில் சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சி புரிந்த அத்தனை கட்சிகளும் தமிழ் மக்களின் உரிமையை வழங்க மறுத்திருந்தன. ஆளும் கட்சி ஒன்று சொன்னால் எதிர்கட்சி எதிர்க்கும். தென்னாசிய நாடுகளில் உள்ள இந்த வருத்தத்தில் ஈழத் தமிழர்களின் இன உரிமைக் குரல்களை சிங்கள தேசக் கட்சிகள் பந்தாடி விளையாடி வந்தமையே வரலாற்று நிகழ்வாகும். மகிந்த ஜனாதிபதியாக இருந்தபோது ரணில் தமிழர் பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டவராக நடித்தார்.

இப்போது புதிய அரசியலமைப்பு முயற்சிகளை குழப்பும் மகிந்த கூறுகிறார் தம்மால்தான் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை வழங்க முடியுமாம். 2009 இனப்படுகொலை யுத்தத்தை நடாத்திவிட்டு, தமிழ் மக்களுக்கு அவர் வழங்கிய தீர்வுகளை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை வடக்கு ஆளுநராக நியமித்தார். கிழக்கிலும் இராணுவத்தளபதி. கிறீஸ்பூதங்களை உலவ விட்டார்.

தனது அரசியல் கைக்கூலிகளை வைத்து வடக்கு கிழக்கு நாட்டில் தன் இராணுவ – இன ஒடுக்குமுறை அரசாட்சியை நடத்தியதை மறக்க முடியுமா? இப்போது சாத்தான் வேதம் ஓதுவதைப்போல தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வு தருவாராம். மைத்திரி வந்தால் தீர்வு கிடைக்கும் என்றார்கள் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு. 2016 என்றார்கள். 2017 என்றார்கள். 2018 என்றார்கள். இப்போது தென்னிலங்கை 2020இல் யார் ஜனாதிபதி என்ற விவாதத்தை தொடங்கிவிட்டது.

இராமன்  ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் எங்களுக்கு என்ன? மகிந்தவும் மைத்திரியும் ஒன்று என்பதை உணரவும் எங்களுக்கு ஒரு ஆட்சிக்காலம் தேவைப்பட்டதா? இந்த அரசை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு தண்டித்து, நாம் ஒரு நீதியை பெற முயலவில்லையே? அவ்வாறு பெறும் தீர்வும் உரிமையும்தானே நிலையானது. ஆனால் மைத்திரி அரசு தமிழர்களை வைத்துக் கொண்டு அந்தக் குற்றங்களிலிருந்து மகிந்தவை காப்பாற்றிவிட்டது.

இப்போது வடமராட்சி கிழக்கில் சிங்களவர்கள் வந்து மீன்  பிடிக்கிறார்கள். இப்படித்தான் நாயாற்றிலும் கொக்கிளாயிலும் வந்தார்கள். இப்போது அங்கு சிங்களக் குடியேற்றங்களே நடந்துவிட்டன. கொக்கிளாய் முகத்துவாரத்தை பார்த்தால் மாத்தறை போல இருக்கிறது. மாதுறை என்பது மாத்தறையாய் மாறியதுபோல எல்லாமே மாறுகின்றன. இதனை தடுக்க வக்கில்லாத தலைமைகள் சிங்கள அரசுக்கு காலக்கெடு கொடுக்கிறதாம்.

இன்னொரு வெலி ஓயாவாக்கும் திட்டத்தை மைத்திரி அரசே நடத்துகிறதா? நாவற்குழியில் மகிந்த கொண்டு வந்து இறக்கிய சுமார் 100 குடும்பங்கள் இப்போது இன்னும் பெருகியுள்ளதாம். முன்பெல்லாம் கரையோரங்களை ஆக்கிரமித்த சிங்கள தேசம் இப்போது வடக்கின் கிழக்கின் மையங்களில் வந்து குடியேறுகிறார்கள். மைத்திரி மகாவலி அமைச்சராக இருந்து கொண்டு இன்னும் குடியேற்றங்களை தூண்டுகிறார்.

இப்படியான நிலமை உள்ளபோது, அதனை தடுக்காமல் உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன் என்ற வகையில் தமிழ் மக்களை மேலும் மேலும் அழிவுக்கும் இழப்புக்கும் தள்ளி வருகிறது அரசு. அதற்கு முண்டு கொடுக்கிறது கூட்டமைப்பு. நான்கு வருடமும் நக்கிப் பிழைத்து விட்டு இப்போது வந்து தீர்வுக்கு சூழல் இல்லை என்கிறபோது கடும் ஆத்திரமே வருகிறது. பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு அரசை ஆதரித்தீர்கள்? என்று நாக்கை பிடுங்கிக்கொள்கிற மாதிரி கேட்க வேண்டும் இவர்களை பார்த்து.

ஆசிரியர்,
04.06.2018

Leave A Reply

Your email address will not be published.