மக்களின் உயிரைக் குடிக்கும் நுண் கடன்! இதுவரை 53 தற்கொலைகள்!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை நுண்கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தினால் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமை அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.

கடந்த வருடங்களை விட மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018ம் ஆண்டு முதலாம் திகதி தொடக்கம் கடந்த ஐந்து மாதங்களில் 53 தற்கொலை மரணச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் 2016ம் ஆண்டு 97 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளதுடன், 2017ம் ஆண்டு கடந்த வருடம் 116 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த இரண்டு வருடங்களையும் விட இந்த ஆண்டு ஐந்து மாதத்திலேயே 53 தற்கொலைகள் இடம் பெற்றுள்ளன.

நுண் கடனைப் பெறுபவர்கள் இறுதியில் அதனை மீள செலுத்த முடியாததால் தற்கொலைக்கு செல்கின்றனர். ஒரு தேவை கருதி நுண்கடனைப் பெற்றுக் கொள்ளும் போது கடனாளி கடனைச் சரியான விதத்தில் கட்ட முடியாத கஷ்டமாக நிலைமை உருவாகின்றது. இதனால் பிள்ளைகளின் கல்வி நிலையானது முதலில் பாதிக்கப்படுகின்றது.

சிறுகடன்களை வழங்கிவிட்டு முகவர்கள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கடன்தொகையை அறவிடும் போது கடனாளி கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் பாலியல் ரீதியாக லஞ்சம் கோரும் விடயங்களில் ஈடுபடுகின்றனர்.

கடனை வழங்கி விட்டு அதனைப் பெறுவதற்காக வாராந்தம் அவர்களின் வீடு தேடிச் செல்லும் அதிகாரிகள் பயனாளி கடனை செலுத்த குறித்த வாரம் தவறினால் அதற்கு இந்த அதிகாரிகள் தேவையற்ற விதத்தில் கதைப்பதும் அவர்களின் உள்ளங்களை காயப்படுத்தும் வகையில் கதைப்பதாகவும், இதனாலேயே தற்கொலைக்கே செல்கின்றனர் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் யுவதி ஒருவர் கடன் தொல்லை காரணமாக தூக்கில் தொங்கி சிவன் கோயில் வீதி பேத்தாழையில் வசிக்கும் பஞ்சாட்சர வடிவேல் நோஜிதா (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமது பெற்றோர்கள் அரேபிய நாட்டிற்கு தொழில் வாய்ப்பு தேடிச் சென்றுள்ளதினால் சகோதரர்களுடன் குறித்த யுவதி வாழ்ந்து வந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற தினமன்று நுண்கடன் வழங்கும் நிறுவனமொன்றிக்கு நிலுவைப் பணம் செலுத்த வேண்டிய தேவை இருந்துள்ளது. வழக்கம் போல் மதிய உணவினை அன்றைய தினம் தயாரித்த பின்னர் வெளியில் சென்ற சகோதரர் வீடு திரும்ப நேரமாகியதினால் உணவு உண்ண வருமாறு கைத்தொலைபேசி மூலம் குறுந்தகவல் அனுப்பி விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சகோதரர் வீடு வந்து பார்த்த போது தமது இளைய சகோதரர்கள் வீட்டின் ஜன்னல் ஊடாக பார்வையிட்டு அழுது கூச்சலிட்டதைக் கண்டு பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தமது சகோதரி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசாரின் முறைப்பாட்டில் தமது வாக்கு மூலத்தினை பதிவு செய்துள்ளார்.

அவரை காப்பாற்றும் முகமாக அயலவர்களின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற போதும் இடைவழியில் உயிரிழந்துள்ளதாக சகோதரர்கள் தெரிவித்தனர்.

தமது சகோதரர் ஒருவருக்கு உடலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்கும் வேறு தேவைகளுக்காகவும் அதிகளவு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் தமது தாயார் பல நுண் கடன் நிறுவனங்கள் மற்றும் வெளி நபர்களிடம் தனது பெயரிலும் உயிரிழந்த குறித்த யுவதியின் பெயரிலும் பணத்தினை கடனாகப் பெற்று மருத்துவ சிகிச்சைக்கு அதனை பயன்படுத்தியுள்ளார்.

மேற்படி கடன் விடயங்களுக்கு தமது மகளை பொறுப்பாளியாக்கி விட்டு கடன் சுமையினை நிவர்த்தி செய்ய தாய்; அரேபிய நாட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தமது தந்தையும் சென்றுள்ளார். இவ்வாறான நிலையில் கடன் வழங்கிய நிறுவன உத்தியோகஸ்த்தர்கள் சிலர் வீட்டிற்கு அடிக்கடி வந்து பண நிலுவையினை செலுத்துமாறு தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளனர்.

இந்நிலைமை காரணமாக குறித்த சில மாதங்களாக அவர் மனமுடைந்து அச்சமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தமது தந்தை நாடு திரும்பவுள்ளதாகவும் நாடு திரும்பியதும் தாங்கள் வசித்து வரும் வீட்டினை விற்று விட்டு கடன் நிலுவையினை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தந்தை மகளுக்கு தொலைபேசியூடாக சில நாட்களுக்கு முன்பு அறிவுரை வழங்கியதாக சம்பவத்தினை கேள்வியுற்ற அவரது நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தனர். இவ்வாறான நிலையில் மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பிரதேசத்தில் ஆழ்ந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று வந்தாறுமூலையில் நுண்கடன் குடும்பத் தகராறுகள் காரணமாக ஒரு பிள்ளையின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று (05.05.2018) இடம்பெற்றுள்ளது.

நுண்கடனினால் ஏற்பட்ட குடும்பத் தகராறுகள் காரணமாக சனிக்கிழமை (05.05.2018) காலை ஆறு மணியளவில் கிருஷ்ணன் கோயில் வீதி வந்தாறுமூலையை வதிவிடமாகக் கொண்ட அழகரெத்தினம் டிசாந்தினி (24வயது) என்கின்ற ஒரு பிள்ளையின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறான நிலையில் மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறித்த பிரதேசத்தில் ஆழ்ந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு களுவன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்தவர் கடற்றொழில் செய்து வந்தவர் இவர் ஒரு பிள்ளைக்கு தந்தை தான் பட்ட பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

மாவடிவேம்பு பிரதேசத்தில் ஒரு குடும்பம் வீட்டை திருத்துவதற்கு தனியார் வங்கியொன்றில் கடன் பெற்றதால் அதை செலுத்துவதற்கு வசதியில்லாத நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை அதிகரித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார் என திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.நசீர் தெரிவிக்கின்றார்.

நுண்கடன் திட்டத்தினை கட்டுப்படுத்துமாறு கோரி மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அண்மையில் ஆர்பாட்டப் பேரணி நடைபெற்றது.

வந்தாறுமூலை பொதுமக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்பாட்ட பேரணியானது அம்பலத்தடி நீர்முகப்பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி சந்தை வரை பேரணியாக சென்று மீண்டும் நீர்முகப்பிள்ளையார் ஆலய முன்றலில் முடிவடைந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் ஓரத்தில் நின்று தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களையெழுப்பினர். நுண்கடன் நிறுவனங்கள் கடன் வழங்கும் போது உரிய செயற்றிட்டத்தை ஆராய்ந்த பின்னரே கடன்களை வழங்க வேண்டும்.

கடன் சிபார்சுக்காக கிராம சேவக உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் அனுமதி கையொப்பத்தை உறுதிப்படுத்திய பின்னர் வழங்க நடவடிக்கை எடுத்தல், கடன் அறவிடுவோர் எந்தக் காரணம் கொண்டும் கிராமங்களுக்கோ, வீடுகளுக்கோ நேரடியாக வந்து கடன் பணத்தை அறவிடுவதை விடுத்து நுண்கடன் வழங்கும் நிலையங்களில் அறவிடல், ஆய்ந்தறிந்து ஒரு நபருக்கு ஒரு நுண்கடன் நிறுவனமே கடன் வழங்க வேண்டுமே தவிர பல நுண்கடன் நிறுவனங்கள் ஒரு நபருக்கு கடன் வழங்கக் கூடாது போன்ற கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களில் 53 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன எனவும், கடன் சுமையினாலே அதிக தற்கொலைகள் இடம்பெறுகின்றன எனவும் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஆரம்பம் முதல், நேற்று வரையிலான காலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையிலேயே இக்கருத்தை வெளியிட்ட அவர், நுண்கடன், வறுமை, போதைப்பொருள் பாவனை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோரே, மரணம் எனும் தவறான முடிவை எடுக்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சமய, சமூகத் தலைமைகள், அரசியல் தலைமைகள் ஆகியன முன்வந்து, இம்மக்களுக்கு வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், நுன்கடன் திட்டத்திலிருந்து இம்மக்களைப் பாதுகாத்து, தற்கொலை முயற்சியிலிருந்து தடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.

அதேபோன்று குடும்பப் பிணக்குகளும் இளவயதுத் திருமணங்களும் பாலியல் தொல்லைகளும் இவ்வாறான தற்கொலைகளுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன. உயிரை மாய்த்துக் கொள்வது, ஒருபோதும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது. எனவே, இதில் அனைவருக்கும் பொறுப்பு இருக்கின்றது. இதைக் கவனிக்க வேண்டும் எனவும், இந்த தற்கொலை மரணங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூளை, களுவன்கேணி, சித்தாண்டி ஆயித்தியமலை ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறான தற்கொலை மரணங்கள் அதிகம் இடம் பெறுவதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

எனவே எங்கள் பிரதேசத்திற்கு நுண்கடன் தேவையா? இப்படியான இழப்புக்கள் தேவையா? என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம். நுண்கடன் திட்டத்தை எமது கிராமத்தில், பிரதேசத்தில் இருந்து முற்றாக ஒழித்து பெறுமதியான உயிர்களைக் காப்போம், முயன்றால் முடியாதது எதுவுமில்லை, நுண்கடன் பிரச்சனைகளால் அழிந்து வரும் இளம் சமூகம்.

தயவு செய்து இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து விலகி கொள்ளுங்கள். முன்னொரு காலங்களில் இவ்வாறான நுண்கடன் வசதிகள் இல்லாத போது மக்கள் வாழவில்லையா?, நாளுக்கு நாள் புது புது நிறுவனங்கள் உருவாகிக் கொண்டு நுண்கடன் என்ற பெயரில் மக்களின் மீது சுமைகளை திணித்துக் கொண்டு இருக்கின்றனர்.

மாத கடன் வசதி இப்போது நாள் கடன் வசதி என்று நாளுக்கு நாள் கடன் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது கடன் என்பது வாழ்வாதாரத்தை உயர்த்த பயன்படுத்துங்கள். இல்லையேல் அந்த கடன் எண்ணத்தை விட்டுவிடுங்கள்.

சுயதொழிலுக்கென கடனை பெற்று யாருமே சுயதொழில் செய்வது கிடையாது. இதுதான் இன்றைய நிலமை. கடன் வழங்க வரும் நிறுவனங்களை தங்களது பிரதேசங்களுக்கு வருவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

கடனால் உங்கள் வாழ்வாதாரம் உயறுமாயின் அது வரவேற்கத்தக்கது. ஆனால் இன்றைய நிலைமையில் இதை காண்பது அரிது. அதனால் இந்த விடயத்தில் சிந்தித்து செயற்படுங்கள்

நுண்கடன்கள் ஏழைகளின் குரல்வளையை நெரிக்கின்ற கருவிகளாக செயற்படுவதை இன்னமும் அனுமதிக்க முடியாது. குடும்பம் பிரிவது முதல் தற்கொலை வரை சொல்லொணா துயரங்கள் தொடர்கின்றன.

அவரவர் கொள்ளவிற்கு ஏற்ப நுண்கடன் வழங்க வேண்டும். கடன்பெற்றவர்கள் திரும்பச் செலுத்தக் கூடியவர்களா என்பதை பரிசீலனை செய்த பின்பே கடன் வழங்க வேண்டும்.

ஒருநாள் கடன் ஒருவாரக்கடன் ஒருமாதக் கடன் என பலவகையான நுண்கடன்கள் மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றது. இதனை ஒருசீரான நிலைக்குக் கொண்டுவர வேண்டிய தேவையுள்ளது.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூர்த்தி வங்கியில் பல மில்லியன் ரூபாய் பணம் உள்ளது. இந்த பணத்தினை வைத்துக் கொண்டு வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். அத்தோடு மக்களுக்கு கடனான சிறிய வட்டி அடிப்படையில் வழங்க முன்வரலாம்.

ஆனால் இந்த விடயத்தில் உரிய அதிகாரிகள் மக்கள் நலனின் அக்கறை கொள்வது குறைவாகவே இருக்கி;ன்றது. அதுபோன்று அரசியல்வாதிகளும் இந்த விடயத்தில் அக்கறை கொள்வதில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை தலைவிரித்து ஆடுவதற்கும், தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் காணப்படுவதையும் தடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரிநிதிகள் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த முன் வரவேண்டும்.

மக்களின் நலனின் அக்கறை கொண்டு அப்பாவி மக்களை நுண்கடன் என்ற கொடிய ஒட்டுண்ணியிடம் இருந்து காப்பாற்ற அனைத்து மக்கள் பிரிநிதிகளும் உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதனை இவர்கள் செய்வார்களா? 53வது தற்கொலைகளுடன் நிறுத்தப்படுமா?

Leave A Reply

Your email address will not be published.