நல்லாட்சி அரசு தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை எனில் மீண்டும் தமிழர்கள் போராட வேண்டிய நிலை வரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அரசாங்கத்தினை எச்சரித்துள்ளார் .
தமிழர்களை பயன்படுத்தி இந்த அரசாங்கமும் தமது இருப்பினை தக்கவைக்கும் சுயநல போக்கினை கையாண்டு வருகின்றது. நாம் கேட்கும் தீர்வுகள் குறித்து சிந்திக்க அரசாங்கம் தயாராக இல்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் மீண்டும் தமிழர்கள் போராட வேண்டிய நிலைமை உருவாகும் என சிறிதரன் தெரிவித்துள்ளார் .
சிறிதரனின் இந்த கருத்து இளைஞர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது .மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்று தாங்கள் சுக போக வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு சிறிதரன் வீர வசனம் பேசி இளைஞர்களை உசுப்பேத்த முனைகின்றார்.
கையாலாகாத எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காகவும் சொகுசு வீடு சொகுசு வாகனத்திற்கும் ஆசைப்பட்டு ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் சிங்கள பேரினவாதிகளிடம் அடகு வைத்து விட்டு வீரவசனம் பேசி இளைஞர்களை உசுப்பேத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது .
தமிழ் மக்களின் நலனில் உண்மையான அக்கறை இருந்தால் சம்பந்தன் ஐயா எதிர்க்கட்சி தலைவர் பதவியை தூக்கி எறிந்து விட்டு வரட்டும் .சிறிதரனுக்கு தமிழ் மக்களின் நலனில் உண்மையான அக்கறை இருந்தால், தமிழ் தேசிய கூட்டமைப்பு இனியும் நல்லாட்சி அரசின் கைப்பொம்மையாக இருக்க கூடாது என்றும் சம்பந்தன் ஐயா எதிர்க்கட்சி தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் சிறிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வலியுறுத்த வேண்டும் .சிறிதரனின் கருத்தினை கூட்டமைப்பு ஏற்க மறுத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு சிறிதரன் வெளியே வரட்டும் .அவ்வாறு நடந்தால் சிறிதரன் உண்மையில் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் அவர் இதய சுத்தியுடன் செயற்படுகின்றார் என்று மக்கள் நம்புவார்கள் .
அதை விடுத்து அரசாங்கத்தின் கைப்பொம்மையாக இருந்துகொண்டு இளைஞர்களை உசுப்பேத்தும் கீழ்த்தரமான செயலில் ஈடுபட வேண்டாம் .
சம்பந்தன் ஐயா வயது போனவர் .அவர் வெய்யில் தாக்கு பிடிக்காமல் குடை பிடிப்பது ஏற்றுக்கொள்ள கூடியது .சிறிதரன் தானே தனக்கு குடை பிடிப்பதும் ஏற்றுக்கொள்ள கூடியது .ஆனால் குடை பிடிப்பதற்கு என்று ஒரு எடுபிடியை வைத்து குடை பிடிப்பது எப்படியென்றால் “அற்பனுக்கு சொகுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் ” அது போன்றது .
சாதாரணமாக தன்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வுசெய்த மக்களுக்கு சேவையாற்றுவதற்கு எடுபிடியை வைத்து குடை பிடிக்கும் சிறிதரன் நாளை உண்மையில் போராட்டம் திரும்பவும் ஆரம்பித்தால் போராட்டத்தில் பங்கு கொள்வாரா என்பது சிறு குழந்தையை கேட்டால் கூட சொல்லும் .முதலில் மக்களுக்கு இதயசுத்தியுடன் சேவையாற்றுங்கள் .வீர வசனம் பேசி இளைஞர்களை உசுப்பேத்தி அவர்களது வாழ்க்கையை அழிக்காதீர்கள்.