யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை ! பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்க பட்டிருக்கலாம் என்று சந்தேகம் !
யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமியொருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .யாழ். சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில், கிணற்றில் இருந்து பாடசாலை சீருடையுடன் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சுழிபுரத்தை சேர்ந்த சிவநேஸ்வரன் றெஜினா (வயது 6 ) என்ற பாடசாலை மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.றெஜினா சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவி.
இன்று குறித்த சிறுமி பாடசாலைக்குச் சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்த வேளை வீட்டில் தாய் தந்தை இருவரும் இருக்கவில்லை . ரெஜினாவின் தாயார் சமூர்த்தி வங்கிக்குச் சென்றுள்ளார். தந்தை வழமை போல் கூலி வேலைக்குச் சென்றுள்ளார்.
வங்கிக்கு சென்ற சிறுமியின் தாயார் மதியம் 3.00 மணியளவில் வீட்டிற்கு வந்த போது சிறுமி வீட்டில் இருக்கவில்லை . மகளை தேடி தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார் . அங்கும் சிறுமியை காணாத நிலையில் தாயார் அச்சமடைந்துள்ளார் .
எங்கு தேடியும் சிறுமியை காணாத நிலையில் சிறுமியின் தாயார் தனது மகளை காணவில்லை என்று உறவினர்கள் மற்றும் அயலவர்களுக்கு தெரிவிக்க அவர்களும் சேர்ந்து சிறுமியை தேடியுள்ளார்கள்.
சிறுமி காணாமல் போன விடயம் ஊரெங்கும் தீயாக பரவ ஊரில் உள்ள இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து கிராமம் முழுவதும் தேடியுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் 200 மீற்றர் தூரத்தில் ஆள்நடமாட்டம் அற்ற பகுதியில் காணப்பட்ட கிணற்றில் சிறுமியின் சடலம் இருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளார் .
சிறுமியைச் சடலமாக கண்ட இளைஞர் கதறி அழுதவாறு சிறுமியின் சடலம் கிணற்றில் இருப்பதாக தாயாருக்கு கூறியுள்ளனர் ..இந்த சம்பவம் குறித்து வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது .
சம்பவ இடத்திற்குச் விரைந்த வட்டுக்கோட்டைப் பொலிஸார் கிணற்றில் கிடந்த சிறுமியின் சடலத்தினை மீட்டுள்ளனர். சிறுமியின் சடலம் சீருடைகள் இல்லாமல் வெறும் உள்ளாடையுடன் மட்டும் காணப்பட்டுள்ளது .அதனால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது .
சிறுமியின் கழுத்தில் கயிற்றால் நெருக்கிய தடயம் காணப்படுகின்றதுடன், காதில் இருந்த தோடு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
சம்பவ இடத்திற்கு சென்ற மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சிறுமியின் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.