ராஜபக்ச செல்லால் அழித்தார்! மைத்திரி சொல்லால் அழிக்கிறார்!!

0

ஸ்ரீலங்காவின் இன்றைய ஜனாதிபதி மைத்திரியை வாழும் நெல்சன் மண்டேலா என்றும் வாழும் காந்தி என்றும் அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஒருமுறை கூறியிருந்தார். அந்தளவுக்கு அவர் ரொம்ப நல்லவராம். உலகத்தில் கெட்டவனைக் காட்டிலும் நல்லவனாக படிப்பவர்களோ கொடுமையானவர்கள். அப்படி ஒருவர் தான் மைத்திரி.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சி கொடுங்கோலாட்சிதான். அந்தக் கொடுங்கோலாட்சியில் தமிழ் மக்கள் வஞ்சிக்கப்பட்டதையும் விடவும் இப்போது கடுமையாக வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றால், மைத்திரியின் ஆட்சி எத்தகையது? மைத்திரி எவ்வளவு கொடுமையானவர் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மகிந்த ராஜபக்ச ஐந்தடி பாய்ந்தார். மைத்திரியோ ஐந்தாயிரம் அடி பாய்ந்து சிங்களப் பேரினவாதத்தை வெளிப்படுத்துகின்றார்.

அப்போதும் கொடுங்கோலானான ராஜபக்ச ஆட்சியிலிருந்து விலகும்போது குறிப்பாக தமிழ் மக்களைப் பார்த்து ஒன்றை சொன்னார். தெரிந்த பேயைவிட தெரியாத பிசாசு பொல்லாதது என்பதை உணர்வீர்கள் என்று. தானும் பேய்தான் ஆனால் தான் தெரிந்த பேய். மைத்திரியும் பேய் ரகம்தான். அதாவது பிசாசு. ஆனால் அவரைப் பற்றி தெரியாமல் துன்பப்படுவீர்கள் என்று ராஜபக்ச சொன்னது இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

அண்மையில் ஸ்ரீலங்கா அமைச்சர் சுவாமிநாதன் ஸ்ரீலங்கா பிரதமரிடம் ஒரு கோரிக்கை முன்வைத்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரத்திற்காக சில உதவித் திட்டங்களை செய்யலாம் என்று கோரியுள்ளார். அதற்குப் பதில் அளித்த மைத்திரிபால சிறிசேன, முன்னாள் போராளிகளுக்கு உதவுவது என்பது விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்கு ஒப்பானது என்று கூறியுள்ளார். இதனை ஆழமாக பார்க்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதுவுமே செய்யக்கூடாது. அவர்களுக்கு உதவக்கூடாது. அவர்கள் வறுமையிலிருந்து அழிந்துபோகட்டும். என்பதை மைத்திரி சொல்லாமல் சொல்கிறார். இப்படித்தான் அரசியல் கைதிகளை விடுவிக்காமல், தமிழ் நிலங்களை விடுவிக்காமல் தமிழர்கள் அழிந்து போகட்டும் என்று கோர மௌனத்துடன் இருக்கிறார். மகிந்த ராஜபக்ச உலகத்தை ஏமாற்றவும் தப்பிக்கொள்ளவும் என்றாலும் முன்னாள் போராளிகளுக்கும் தமிழர்களுக்கும் உதவுவதுபோல் நடித்தார்.

ஆனால் இதுவரை நாம் அறிந்திராத இந்தப் பிசாசு எங்கள் போராளிகளுக்கு எதிராக இப்படி வன்மத்தை கொட்டுகிறது. ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் தமது தந்தையை விடுவிக்குமாறு வலியுறுத்தி மாதங்கள் பலவாகின்றன. அதற்கு இன்னமும் மைத்திரியின் மனம் இரங்கவில்லை என்றால் மைத்திரி உண்மையிலேயே பிசாசாகவே இருக்க வேண்டும். பிசாசுக்குத்தான் இவ்வளவு வன்மமும் கொடூரமுமான மனம் இருக்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் இருந்து போராடுகிறார்கள். போரில் கொல்லப்பட்டவர்களுக்காக ஈழமே கண்ணீர் விட்டு அழுகிறது. இராணுவத்தை காட்டிக் கொடுக்க மாட்டேன், ராஜபக்சவை மின்சாரக் கதிரையிலிருந்து காப்பாற்றினேன் என்று வீரம் பேசுகிறார் மைத்திரி. தோற்றுப் போன இனத்துடன் இன்னமும் வீரம் பேசுவது ஏன்? தமிழ் ஈழ மக்களை முழுவதுமாக அழிக்க மைத்திரி எண்ணுகிறாரா?

தமிழ் மக்கள் போட்ட வாக்குப் பிச்சையில் வந்த மைத்திரிதான் இப்படிப் பேசுகிறார். நன்றி மறக்க மாட்டேன். தமிழர்கள் செய்த உதவியை மறக்க மாட்டேன். செய்யவேண்டியதை செய்வேன் என்று கூறிய மைத்திரி நன்றாகவே தமிழர்களுக்கு எதிரான கைங்கரியங்களை செய்து வருகிறார். பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாய் நன்றாக தொடர் இன அழிப்பு செய்கிறார் மைத்திரி.

இந்தப் பிசாசு, பேயையும் பாதுகாத்துக்கொண்டு, சிங்களப் பேரினவாதத்தையும் பாதுகாத்துக்கொண்டு ஈழத் தமிழ் இனத்தை அழித்து முடிப்பதில் குறியாக இருக்கிறது. இதற்கு எதிராக ஈழத் தமிழர்கள் களம் இறங்க வேண்டும். எமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்புடுகொலையே எம்மிடம் இன்றுள்ள ஒற்றை ஆயுதம். அந்த வலுவான ஆயுதத்தை பயன்படுத்தி எமது விடுதலையை வென்றெடுக்கத் தவறினால் மைத்திரிகள் எம்மை அழித்துக்கொண்டே இருப்பர்.

ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.
17.06.2018.

Leave A Reply

Your email address will not be published.