விசுவமடு மக்களின் விசுவாசமும் விலைபோகும் மாவீரர்களின் தியாகங்களும்

0

விசுவமடு பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய கேணல் இரத்னபிரிய வேறு பிரதேசத்துக்கு இடம் மாற்றப்பட்ட காரணத்தினால் விசுவமடு பிரதேசத்தில் இருந்து அண்மையில் விடைபெற்று சென்றிருந்தார் .இவருக்கு விசுவமடு பிரதேச மக்கள் கண்ணீர்மல்க பிரியாவிடையளித்திருந்தனர்.இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரல் ஆகி இருந்ததுடன் கடுமையான வாதபிரதிவாதங்களையும் ஏற்படுத்தி இருந்தது.

விடைபெற்று சென்ற இராணுவ அதிகாரிக்கு முன்னாள் போராளிகள் பலர் கட்டி அணைத்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது .குறித்த இராணுவ அதிகாரி விசுவமடு பிரதேச மக்களுக்கு பல சேவைகளை செய்ததாகவும் , முன்னாள் போராளிகள் பலருக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுத்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தியதாகவும் அதன் காரணமாகவே விசுவமடு பிரதேச மக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் கட்டியணைத்து அழுததாகவும் தெரிவிக்கப்படுகின்றது .

குறித்த இராணுவ அதிகாரி உண்மையிலேயே மற்றைய இராணுவ அதிகாரிகளை போலன்றி பரந்த மனப்பான்மை உடையவராக இருந்திருக்கலாம் .அல்லது உலக நாடுகளுக்கு இலங்கை இராணுவம் மனிதாபிமானம் உடைய இராணுவம் ,அவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்புக்கள் இல்லை என்பதனை கட்டுவதற்காக சிங்கள பேரினவாத அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு ஏற்கனவே நன்கு பயிற்றுவிக்கப்பட்டு விசுவமடு பிரதேசத்துக்கு அனுப்ப பட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கலாம் .ஆனால் எதுவாகினும் இவ்வாறான ஒரு சம்பவம் இடம் பெற யார் காரணம் என்பதனை நன்கு ஆழமாக சிந்திக்க வேண்டும் .

முப்பவருட காலமாக தியாகங்களாலும் , இரத்தம் சதையினாலும் ,அர்பணிப்புகளாலும் உரம் ஊட்டப்பட்ட தமிழர் தாயகத்தில் அதுவும் வீரம் செறிந்த வன்னி மண்ணில் உள்ள விசுவமடுவில் ஒரு இராணுவ அதிகாரி அந்த பிரதேசத்தை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களின் அன்பையும் மதிப்பினையும் பெற்றுள்ளார் என்றால் அது எவ்வாறு சாத்தியம் என்ற பாரிய கேள்வி மனதினுள் எழுகின்றது .

2009 இல் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் போரில் பாதிக்கப்பட்ட மக்களும் விடுதலை போராட்டத்தில் பங்கு பற்றிய முன்னாள் போராளிகளும் ஏதிலிகள் ஆக்கப்பட்டு நிர்கதிக்கு உள்ளாக்கப்பட்டமை மறுக்க முடியாத உண்மை .தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் ஆட்சியில் போராளிகள் குடும்பம், மாவீரர் குடும்பம், போராட்டத்தில் விழுப்புண் அடைந்த போராளிகளை கவனிப்பதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு செயற் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வந்தது .

2009 இன் பின்னர் இந்நிலை முற்றாக அழிக்கப்பட்டு போரில் பாதிக்கப்பட்ட மக்களும் முன்னாள் போராளிகளும் நடு தெருவில் விடப்பட்டனர் . 2009 இன் பின்னர் சரியான அரசியல் தலைமை இல்லாமல் தமிழர் தரப்பில் அரசியல் இஸ்திரம் அற்ற தன்மையே காணப்படுகின்றது .தமிழ் மக்களின் தற்போதையை ஏக பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் கூவிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது அரசியல் சுய இலாபங்களுக்காக தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளை பேரினவாதிகளிடம் அடகு வைத்து சுக போக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்களே தவிர போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் முன்னாள் போராளிகளையும் கவனிக்கவில்லை .அவர்களது வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்துவதற்குரிய உருப்படியான எந்த நடவடிக்கையையும் கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை .

புலம் பெயர் தமிழர்கள் மற்றும் ஒரு சில அமைப்புகள் மூலம் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டாலும் அது அனைத்து மக்களையும் சென்றடையவில்லை .வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் பணத்தினை தாம் சுருட்டிக்கொண்டு மிகுதியை போரினால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கும் இழிவான செயற்பாடுகளும் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்புடைய தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராமுகமும் அசமந்த போக்கினையும் அரசாங்கம் சரியான முறையில் பயன்படுத்தி வருகின்றது என்பது தான் உண்மை .

இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தப்புவதற்கும் , பொறுப்பு கூறலில் இருந்து நழுவுவதற்கும் சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கும் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டிய பாரிய நெருக்கடியில் இலங்கை அரசாங்கம் உள்ளது .விசுவமடு பிரதேசத்தில் இருந்து விடைபெற்று சென்ற இராணுவ அதிகாரிக்கு கிடைத்த பிரியாவிடையின் மூலம் மக்களின் மனங்களை வெல்வதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது என்றே கூற வேண்டும் .

தியங்கங்கள் மூலம் உரமூட்டப்பட்ட வன்னி மண்ணில் ஒரு இராணவ அதிகாரி இந்த அளவு வரவேற்பினை பெற்றுள்ளார் அதிலும் முன்னாள் போராளிகளின் மனங்களை வென்றுள்ளார் என்றால் அதற்காக அவரை பாராட்டியே ஆக வேண்டும் .ஆனால் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் மாவீரர்களின் தியாகங்களுக்கு பதில் கூற வேண்டிய கடைபாடு அனைவருக்கும் உண்டு .

இந்த சம்பவம் தொடர்பில் வெறுமனே தமிழ் தேசிய கூட்டமைப்பை குற்றம் சுமத்தி நழுவி விட நினைத்தால் நாம் மாவீரர்களையும் அவர்களது தியாகங்களையும் மேலும் அவமதிக்கின்றோம் என்றே அர்த்தம் .போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய தார்மீக கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது என்பதனை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும் .

ஈழ தமிழர்கள் ,மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு அவர்களது வாழ்க்கை காலம் முழுவதும் உதவ முடியும் .அதற்காக பெரிதாக எதுவும் செய்ய வேண்டியது இல்லை .மாதாந்தம் ஒவ்வொருவரும் ஆயிரம் ரூபா வழங்கினால் போதும் .ஆனால் அதனை வழங்குவதற்கு நம்மில் எத்தனை பேர் தயாராக உள்ளோம் என்பது கேள்விக்குறி .

இணையதளம் பார்ப்பதற்கும் யூ டியூபில் வீடியோ பார்ப்பதற்கும் நாம் செலவழிக்கும் டேட்டா கார்ட் வாங்குவதற்கு காசு செலவழிக்கும் நாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்க மாதாந்தம் ஆயிரம் ரூபவினை கொடுக்க தயங்குவது வேதனைக்குரிய விடயம் .

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு உதவும் கரங்கள் போன்ற ஒரு நம்பகரமான அமைப்பினை ஏற்படுத்தி அதன் ஊடக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அனைவரும் முன்வாருங்கள் . நம்பகரமான அமைப்பினை உருவாக்குவதற்கு சமூகத்தில் உள்ள நேர்மையான மனிதர்கள் புத்திஜீவிகள் முன்வர வேண்டும் என்று ஈழம் நியூஸ் இணையம் கோரிக்கை விடுக்கின்றது.

பாதிக்கப்பட்ட மக்களினதும் முன்னாள் போராளிகளினதும் வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்த நாம் தவறுவோமாக இருந்தால் விசுவமடுவில் மக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் கண்ணீர்மல்க இராணுவ அதிகாரியை வழியனுப்பி வைத்ததை போன்று வன்னியில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் இடம்பெறும் .நாம் செய்ய வேண்டிய கடமையை அரசாங்கம் இராணுவம் மூலம் செய்து சர்வதேச ரீதியில் சிறந்த இராணுவம் என்ற நற்பெயரை எடுக்கும் என்பதில் ஐயம் இல்லை .

 

Leave A Reply

Your email address will not be published.