வீட்டு பணிப்பெண்ணின் உடலை தோளில் சுமந்து கௌரவித்த டுபாய் நாட்டினர்

0

மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்படும் பெண்களை வீட்டு உரிமையாளர்கள் கொடுமை படுத்துவது பற்றிய செய்திகளை தான் அதிகம் படித்திருப்போம் .ஆனால் அதற்கு மாறாக மத்திய கிழக்கு நாட்டினர் அனைவருமே கொடுமைக்காரர் இல்லை என்பதனை உணர்த்தும் முகமாக மனதை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது .

ஜா-எல கப்புவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் சாந்தி பெரேரா.இவர் நான்கு பிள்ளைகளை பராமரிக்கும் சேவைக்காக கடந்த 1981 ஆம் ஆண்டு துபாய் நாட்டுக்கு சென்றுள்ளார்.அங்கு சென்ற பின்னர் மேலும் நான்கு பிள்ளைகள் என எட்டு பிள்ளைகளை பராமரிக்கும் பொறுப்பு சாந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சாந்தி நல்ல முறையில் நிறைவேற்றி வந்துள்ளார்.இதனால் சாந்தி பணிபுரிந்த வீட்டினர் சாந்தி மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தனர் .

துபாய் நாட்டில் 38 ஆண்டுகளாக ஒரே வீட்டில் பணிபுரிந்து வந்த சாந்தி கடந்த 2009 ஆம் ஆண்டு சுகயீனம் அடைந்துள்ளார் . சாந்தி பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர்கள் சாந்தியை இலங்கைக்கு அனுப்பி வைக்காது அங்கு வைத்து தமது சொந்த செலவில் சாந்திக்கு சிகிச்சையளித்து வந்துள்ளனர். சாந்தி சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் அவரது சகோதரர் துபாய் வந்து செல்ல பயண ஏற்பாடுகளையும் அவர்கள் இலவசமாகசெய்து கொடுத்துள்ளனர்.

சாந்தியின் உடல் நிலை தேறாத காரணத்தினால், அவரை பராமரிக்க இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரை வேலைக்கு அமர்த்தி சம்பளம் கொடுத்து தமது வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர்.எவ்வளவு சிகிச்சை செய்தும் சாந்தியின் உடல் நிலை தேறவில்லை .அதனால் சாந்தியின் கோரிக்கைக்கு அமைய இலங்கையில் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர். குணமடைந்ததும் மீண்டும் தமது வீட்டுக்கு வர வேண்டும் என்ற உறுதிமொழியுடன் சாந்தியை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.

ஆயுர்வேத சிகிச்சையை சாந்தி பெற்றுக்கொண்ட போதும் அவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை .மாறாக நாளுக்கு நாள் உடல் நிலை மோசமாகியது .சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் , அண்மையில் சாந்தி இறந்து விட்டார் .இதனை கேள்விப்பட்ட சாந்தி பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர்கள் 6 பேர் உடனடியாக இலங்கைக்கு வந்துள்ளார்கள்.சாந்தியின் இறந்த உடலை கண்டதும் இவர்கள் கதறி அழுதுள்ளார்கள் . சாந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தோளில் சுமந்தவாறு அம்மா, அம்மா என அழுது புலம்பியுள்ளனர். இந்த சம்பவம் சாந்தியின் இறுதி கிரியைகளில் கலந்துகொண்டோரின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

சாந்தி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த போது 2012 ஆம் ஆண்டு முதல் சாந்தி இறக்கும் வரை வருடந்தோறும் வீட்டின் உரிமையாளர்கள் துபாய் நாட்டில் இருந்து வந்து சாந்தியை பார்த்து விட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது. அட இப்படியான நல்ல மனிதர்களும் மத்தியகிழக்கு நாடுகளில் இருக்கின்றார்களே என்று இலங்கையர்கள் ஆச்சரியப்பட்டுள்ளார்களாம் .

Leave A Reply

Your email address will not be published.