இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்கமுடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள். இன்றோடு 25 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும்,ஏன்…. உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது.
யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த கப்டன் மில்லர் எனும் இயக்கப்பெயர் கொண்ட வல்லிபுரம் வசந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர் . 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி பிறந்த இவரே முதல் கரும்புலியாக 05-07-1987 அன்று யாழ்- வடமராட்சிக் கோட்டத்தில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரமரணமடைந்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடை நீக்கிகளாக தம்மையே உயிராயுதமாக்கி தம் இனத்திற்காக உடலோடு வெடிசுமந்து எதிரியின் பலத்தை தகர்த்தெறிந்த இரும்பு மனிதர்கள்.
மண்மீதும், தன் மக்கள் மீதும் கொண்ட அளவற்ற நேசிப்பால் முகம் மறைத்து, முவரி மறைத்து எத்தனையோ பெரும் தாக்குதல்களை நடாத்தி சாதனைபடைத்த அற்புதங்களை நினைவுகொள்ளும் இன் நாள் புனிதமானது.
இமாலய சாதனைகளை படைத்து வீரகாவியமாகி இன்றும் வெளியில் தெரியா மாணிக்கக் கற்களாய் ஈழவரலாற்றுப் பக்கங்களில் மறைந்து கிடக்கும் தேசப்புயல்களை தமிழீழ மக்களோடு வருடல் இணையமும் தலைசாய்த்து வணங்கி இவர்களின் இலட்சியமான தமிழீழ விடுதலைக்கும், தமிழர்களின் சுதந்திர வாழ்விற்கும் தொடர்ந்து குரல் கொடுத்து, பணிசெய்வோம் என இன் நாளில் உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.