இரண்டு சிறுநீரகங்களையும் இழந்த ஒரு மாணவன்! கவிஞர் தீபச்செல்வன் கூறிய சோகக் கதை!!

0

கிளிநொச்சியில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு பாராட்டு விழா ஒன்று நேற்று நடைபெற்றது. அதில் விருந்தினராக கலந்துகொண்ட தீபச்செல்வன் இரண்டு சிறுநீரகங்களையும் இழந்த தன்னுடைய பன்னிரண்டு வயதான மாணவன் ஒருவர் தொடர்பில் பேசியது நிகழ்வில் கலந்துகொண்டவர்களை கண்கலங்க வைத்துவிட்டது.

இதோ அப் பேச்சு.

நேற்று முந்தினம் எங்கள் பாடசாலைக்கு ஒரு மாணவன் வந்தான். எங்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன்தான். இப்போது ஏழு மாதங்களாக பாடசாலைக்கு வருவதில்லை. பன்னிரு வயதான அவன் தரம் ஏழாம் வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்தான். முகத்தில் கிருதித் தொற்றை தடுக்கும் கவசத்துடன் வந்திருந்தான். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பாடசாலையில் விளையாட்டுப் போட்டி நடந்தது. அப்போது விழுந்ததில் சிறு விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவனது இரண்டு சிறுநீரகங்களும் செயழிந்திருப்பது தெரியவந்தது.

அந்த மாணவனின் முகத்தை பார்க்க இயலவில்லை. அவனுடன் பேச சக்தியை வரவழைத்துக் கொண்டேன். தமிழ்பாட வகுப்பறையில் மிகவும் சேர்வாக இருப்பான். ஆனாலும் கந்தகம் படிந்த அந்த முகத்தை கிழித்துக் கொண்டிருக்கும் புன்னகை கொள்ளையழகு. அவனுக்கு தமிழ் வகுப்பில் மெல்ல எழுத்துக்களை கற்பித்துக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு எழுத்துக்களாக தனக்குள் படியச் செய்வான். எல்லாவற்றையும் எளிய புன்னகையால் கடந்து செல்லும் அந்த சிறுவன் இனி வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்ற நிலையில் சக மாணவர்களை பார்க்க வந்திருந்தான்.

அவனுடன் என்ன உரையாடுவது? ஒற்றைக் கையெனான்று நன்றான ஒட்டிப்போயிருந்தது. சக்தி முழுவதையும் பயன்படுத்தி அவனிடம் பேசினேன். அவன் சக மாணவர்களை சந்திப்பதையும் அவர்களுடன் பேசுவதையும் தூரமாகவே நின்று பார்த்தேன். ஒரு குழந்தை தன் சக குழந்தைகளிடம் விடைபெறுதலை, இறுதி சந்திப்பை நிகழ்த்திய அந்தக் கணங்கள் உலகில் வேறு எந்தக் குழந்தைக்கும் வந்துவிடக்கூடாது. வேறு சில குழந்தைகளின் நிலவரங்கள் குறித்தும் முன்னர் எழுதியிருக்கிறேன். இத்தகைய குழந்தைகளுடன் வகுப்பறையை கடப்பது என்பது இந்த மண் மேற்கொள்ளும் மாபெரும் கடின பயணம்தான்.

பரீட்சை எழுத தயாராக இருக்கும் மாணவர்களும் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களும் இத்தகைய புலத்திலிருந்து வந்தவர்கள். இன அழிப்புப் போர் எங்கள் மண்ணை கடுமையாக பாதித்துவிட்டது. நிலத்திற்கும் இனத்திற்குமான அழிவை தந்துவிட்டது. இன அழிப்புப் போரின் விளைவுகளை இன்றைக்கும் பல்வேறு வடிவங்களில் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். விடுதலைக்காக, உரிமைக்காக நிறையவே இந்த மண்ணில் சிந்தியும் விதைத்தும் விட்டோம். நிராயுதமான இன்றைய நிலையில் கல்வி எங்களின் வலிமையான ஆயுதம்.

இதுவரையில் பரீட்சையை, மாவட்ட, அகில நிலைகளை இலக்காக கொண்ட மாணவர்கள் இனி இந்த மண்ணுக்கான பணியை இலக்காக கொள்ள வேண்டும். 2017ஆம் ஆண்டில் பரீட்சையில் வெற்றி பெற்று பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் அங்கே தங்களை சிறந்த சமூக, தேச சிந்தனையும் பற்றும் கொண்ட பட்டதாரிகளாக உருவாக வேண்டும். நீங்கள்தான் எமது நாளை சமூகத்தின் மானுடவியலாளர்கள், சமூகவியலாளர்கள். பத்திரிகையாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள். அந்த இலட்சியங்களை நோக்கி நீங்கள் நகர வேண்டும்.

தென்னிந்திய திரைப்படத்தின் வணிக நோக்கம் கொண்ட கலாசாரங்களைப் பின் பற்றாதீர்கள். தென்னிந்திய வணிக தொலைக்காட்சியின் கலாசார திணிப்புக்களை தோற்கடியுங்கள். ஈழத் தமிழ் மொழிக்கு தமிழகத்திலே நிறைய மதிப்புண்டு. எங்கள் பேச்சு மொழியே பண்டைய தமிழ் இலக்கியத்தின் கூறுகளை கொண்டது என தமிழக தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள். உலகில் தமிழ் இலக்கியத்தினை அடையாளப்படுத்துபவர்கள் ஈழத் தமிழர்கள்தான். எங்கள் தனித்துவமான அடையாளத்தை பாதுகாப்பதும் பின்பற்றுவதும் எங்கள் கடமையும் பொறுப்பும்.

இன அழிப்பு போரின் விளைவால் குழந்தைகள் நோயாளிகளாக்கப்பட்ட, குழந்தைகள் இறுதி சந்திப்பை நிகழ்த்தும், குழந்தைகள் கையசைத்து விடைபெறும் இந்த நிலத்திலிருந்து கல்வியில் முன்னோக்கி செல்லும் உங்களுக்கு நிறையவே கடமையும் பொறுப்பும் உண்டு. எங்கள் தேசத்தையும் மண்ணையும் அதன் வரலாற்றையும் அதன் அடையாளங்களையும் அதன் பண்பாட்டையும் பேணும் முன்னெடுக்கும் சிறந்த பிரசைகளாக உருவாகுவோம் என்று கூறி விடைபெறுகிறேன்.

கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலய தமிழ்பாட ஆசிரியர் சு.லோகேஷ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளி ஐயனார்புரம் அ.இ.தக பாடசாலை அதிபர் திரு கிஸ்கார்ட், கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் குமார், இந்துநாகரிக பாட ஆசிரியர் எஸ். சிவஞானம், நாடக ஆசிரியர் த.செல்வா, கிளி தட்டுவன்கொட்டி, கண்ணகி அ.த.க பாடசாலை தமிழ் ஆசிரியர் க. செந்தூரன், புவியல் பாட ஆசிரியர் க. தீபன், கரைச்சிப் பிரதேச முன்னாள் உப தவிசாளர் வ. நகுலேஸ்வரன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.