யாழ்ப்பாணம் கோட்டைப்பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதற்குக் காணி வழங்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை(08) பிற்பகல்-02 மணி முதல் யாழ். கோட்டையின் தென்புற நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டனப் போராட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் தேசிய அமைப்பாளரும், யாழ்.மாநகரசபை உறுப்பினருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அமைப்பாளரும், சட்டத்தரணியுமான கே.சுகாஷ், கட்சியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள்,இளைஞர்கள் உள்ளிட்ட தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் எனப் பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “வெளியேறு..வெளியேறு…இராணுவமே வெளியேறு!!, “எங்கள் மண்ணை விட்டு இராணுவமே வெளியேறு!”,”இமானுவேல் ஆர்னோல்ட் மாநகர மேயரா?, நீ இராணுவ மேஜரா?”, “எங்கள் நிலங்களைத் தொல்பொருள் என்று அபகரித்து இராணுவத்தினரிடம் ஒப்படைக்காதே!”, “கோட்டைக்குள் இராணுவம் கேட்டையே விளைவிக்கும்”, “தொல்பொருள் திணைக்களமே இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கா செயற்படுகிறாய்?” , “யாழ். கோட்டையை மீண்டும் ஆக்கிரமிப்புச் சின்னமாக மாற்றாதே!” உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைக் கைகளில் தாங்கியும்,பல கோஷங்களையும் எழுப்பிக் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
குறிப்பாக யாழ்.கோட்டையை இராணுவ மயமாக்குவதற்கு ஆதரவு வழங்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும், தொல்லியல் திணைக்களத்திற்கும் எதிராக இதன் போது ஆவேசமான முறையில் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.