எலும்புக்கூடுகள் மலிந்த தேசம்
———
அவசர அவசரமாய் அடுக்கப்பட்ட
உடல்கள்
ஏதோ ஒரு தோண்டலில் வெளிப்படும்
எலும்புகள்
ஆய்வென்ற பெயரில் அள்ளி அடுக்கப்படும்
நாட்கணக்காய்.
புகழ்பெற்ற பேராசிரியர்கள்
சட்ட வைத்திய நிபுணர்கள்
விசேட அதிகாரிகள்
எல்லோரும் ஒன்றுகூடி
பறித்தெடுப்பர் பத்திரமாய்
மண்மடி காத்துவைத்த மண்டையோடுகளை.
செய்தி வரும்
அதுவும் தலைப்புச்செய்தி
கொதித்தெழுவர் எம்மவர்கள் சிலர்
கற்பனையில் கண்டழுவர் காணவில்லை
என்றவர்கள் பலர்.
சில காலம் கடக்கும்
மறந்திருந்த நாளில் மீண்டுமொரு சேதி வரும்
புதைகுழிகள் மூடப்படும்
டச்சுக்கால எச்சங்களென.
வான்தொட நிமிர்ந்தெழும் கண்கவர் கட்டிடங்கள்
காட்சிகள் மாறும்
காலங்களும் கரைந்துபோகும்
தொடர்கதைகள் தொடர்ந்து நடக்கும்
இன்னும் ஒரு இடத்தில்.
கலங்காதே தாயே !!
தடவிக்கொள் உன் தாய்மடியை
இது நல்லாட்சி.
வினோதினி
30.07.2018