எஸ்.கே. கிருஷ்ணா எவ்வாறு கொலை செய்யப்பட்டார்? நேரில் கண்டவர் தகவல்!

0

நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான எஸ்.கே. கிருஷ்ணா எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

செட்டியார் தெருவில் உள்ள அவரது கடைக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த கிருஷ்ணா காலை 7.20 மணியளவில் இனந்தெரியாத நபரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

நவோதய மக்கள் முன்னணியின் உறுப்பினரான காலஞ்சென்ற வேலணை வேணியனின் இறுதிக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக அவருடைய விற்பனை நிலையத்திற்கு சென்றிருந்தார்.

இதன்போதே குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பவத்தை நேரில் பார்த்தவரும், நவோதய இளைஞர் அமைப்பின் பொதுச் செயலாளர் சந்திரன் இளையதம்பி தகவல் வெளியிட்டுள்ளார்.

“அவருடைய வர்த்தக நிலையத்தை திறந்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது இனம்தெரியாத நபர் மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்தார்.

வந்து வியாபார ரீதியாக பேசுவதைப் போல் உரையாடி எமது தலைவர் எஸ்.கே.கிருஷ்ணாவை துப்பாக்கியால் சுட்டார்.

இதில் எமது தலைவருக்கு இதயத்திலும், நெஞ்சின் இரு பக்கமும், மற்றும் தலையிலும் துப்பாக்கியால் சுடப்பட்டது. 3 அல்லது 4 தோட்டாக்கள் அவருடைய உடலில் பாய்ந்ததை நாம் கண்டோம்.

இந்த வீதியில் உள்ள கண்காணிப்பு கெமராவை பரிசோதித்து பாருங்கள், கடையில் பொருத்தப்பட்டு இருந்த கெமராவை பரிசோதித்து பாருங்கள், வந்தது யார் என்று கண்டு பிடியுங்கள், பொலிஸார் உரிய விசாரணை நடத்தி குற்றவாளியை கண்டுபிடியுங்கள் என குறிப்பிட்டார்.

இதேவேளை, கிருஷ்ணா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பிருக்கலாம் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

உயிரிழந்துள்ள கிருஷ்ணாவுக்கு எதிராக கஞ்சா போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் இரண்டு வழக்குகள் காணப்படுவதாகவும், அவர் பிணையில் இருக்கும் போதே படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கிருஷ்ணா என்று அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் நேற்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட கிருஷ்ணா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி தனது 30ஆவது வயதில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.