ஐந்து டெஸ்ட் என்பது சாத்தியமற்றது- ஸ்டூவரட் பிராட்

0

முதல் இரண்டு டெஸ்டில் 250 ஓவர்கள் வீசினால், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது நடைமுறைக்கு ஒத்து வராதது என்று ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். #ENGvIND

இரண்டு டெஸ்டில் தலா 250 ஓவர்கள் வீசினால் ஐந்து டெஸ்ட் என்பது சாத்தியமற்றது- ஸ்டூவரட் பிராட்
இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளைமறுநாள் புதன்கிழமை (ஆகஸ்ட்-1) தொடங்குகிறது. ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 42 நாட்களில் நடக்கிறது.

42 நாட்களில் (6 வாரம்) ஐந்து டெஸ்ட் என்பது அடுத்தடுத்து விளையாடுவதற்கு சமம் என்று வீரர்கள் கருதுகிறார்கள். இந்த தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

அதேவேளையில் 36 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 6 வாரங்கள் விளையாடாமல் இருந்தார். 32 வயதாகும் ஸ்டூவர்ட் பிராட் மூட்டு வலி காரணமாக சிகிச்சை மேற்கொண்டார். தற்போது இந்திய தொடருக்காக தயாராகி வருகிறார்கள்.

பந்து வீச்சு பளு காரணமாக நீண்ட தொடரான இதில் இரண்டு பேருக்கும் சுழற்சி (rotated) முறையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு டெஸ்டில் தலா 250 ஓவர்கள் வீசப்பட்டால் ஐந்து டெஸ்டில் விளையாடுவது சாத்தியமற்றது என்று ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில் ‘‘நாங்கள் தொடர்ந்து விளையாடுவது போட்டியின் டாஸ், ஆடுகளம் மற்றும் வேலைப்பளு ஆகியவற்றைச் சார்ந்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தலா 250 ஓவர்கள் வீசப்பட்டால், வேகப்பந்து வீச்சாளர்கள் 6 வாரத்தில் ஐந்து போட்டிகளில் விளையாடுவார்கள் என்பது நடைமுறைக்கு ஒத்துவராதது.

ஆனால், ஒரு டெஸ்டில் 80 அல்லது 60 ஓவர்களில் ஆல்அவுட் ஆக்கிவிட்டால், அதன்பின் பந்து வீச்சாளர்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்படும்.

ஆடுகளம் அதிக அளவில் டர்ன் ஆனால் ஸ்பின்னர்கள் அதிக அளவிலான ஓவர்களை வீசுவார்கள். அப்போது வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் ஓவர்கள் வீச வேண்டிய நிலை ஏற்படாது. அதேவேளையில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது என்றால் வேகப்பந்து வீச்சுக்கு அதிக வேலை இருக்கும்’’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.