கருணாநிதியின் கடைசி கட்டமும் இறப்பை எதிர் நோக்கிய காத்திருப்பும் ! காரணம் என்ன ?

0

கலைஞர் கருணாநிதியையோ , செல்வி ஜெயலலிதாவையோ அல்லது தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை நம்பியோ ஈழப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதல்ல .ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் வளர்ந்து வந்த கால கட்டத்தில் தலைவர் எம் ஜி ஆர் , பழ நெடுமாறன், வைகோ என்று பல தமிழ் நாட்டு தலைவர்கள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு உதவிகளை செய்திருக்கின்றார்கள் .

கலைஞர் கருணாநிதி இங்கு வந்து ஆயுதம் ஏந்தி போராடி தமிழீழம் பெற்று தந்திருக்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை .விடுதலைப்புலிகளுக்கு கண்டிப்பாக ஆதரவளித்திருக்க வேண்டும் என்று கட்டாயமும் இல்லை .செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் விடுதலைப்புலிகளை வெளிப்படையாகவே எதிர்த்தவர் .தலைவர் பிரபாகரன் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக கூறியவர் .ஆனால் அவர் இறந்த போது யாரும் மகிழ்ச்சிப்படவில்லை .மாறாக சிறந்த ஒரு பெண் ஆளுமை எம்மை விட்டு பிரிந்து சென்று விட்டது என்று கவலைப்பட்டனர் .காரணம் ஜெயலலிதா அம்மையார் எமக்கு துரோகம் இழைக்கவும் இல்லை எமக்காக நீலிக்கண்ணீர் வடிக்கவும் இல்லை .

ஜெயலலிதா போன்று வெளிப்படையாக கருணாநிதி இருந்திருந்தால் இந்த அளவு விமர்சிக்கப்பட்டிருக்க மாட்டார் .மாறாக கலைஞர் எமக்காக குளிரூட்டி பூட்டி தனது இரண்டு மனைவிமார் புடை சூழ உண்ணாவிரதம் இருந்து நீலிக்கண்ணீர் வடித்தார் .விடுதலை புலிகளை கருணாநிதி காப்பாற்றவில்லை என்று இங்கு யாரும் கொந்தளிக்கவில்லை .தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் கருணாநிதியை நம்பி விடுதலை போராட்டத்தை ஆரம்பிக்கவும் இல்லை .சாவதற்கு துணிந்து தான் புலிகள் போராடினார்கள் .

2009 இறுதி போராட்டம் இடம்பெற்று கொண்டிருந்த போது அப்போதைய இந்திய அரசாக இருந்த காங்கிரசின் பங்காளி கட்சியாக திமுக இருந்தது .குளிரூட்டி பூட்டி உண்ணாவிரதம் இருந்து நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் ஆடியதற்கு பதிலாக இலங்கையில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படா விடில் திமுக காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ளும் அத்துடன் ஆதரவையும் விலக்கிக்கொள்ளும் என்று கூறி அழுத்தம் பிரயோகித்து இருந்தால் ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் .ஆனால் பதவி ஆசை பிடித்த கருணாநிதி எமக்கு துரோகம் இழைத்தார்.

பார் முழுவதும் தமிழனின் வீரம் பற்றி பறை சாற்றிய எமது வீர தலைவனின் பாசத்தாய் சிகிச்சைக்காக பாரதம் சென்ற போது பாராமுகமாக இருந்து பார்வதி அம்மைவை பரிதவிக்க விட்டு மீண்டும் தமிழ் மக்களின் வயித்தெரிச்சலை கலைஞர் சம்பாதித்து கொண்டார் .அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி கருணை காட்டி இருந்தால் பார்வதி அம்மா பிழைத்திருப்பார்.

கருணாநிதி சிறந்த ஒரு தமிழ் அறிஞர் , தமிழ் மேதை , அரசியல் ஆளுமை என்பதில் மாற்று கருத்து கிடையாது .ஆனால் அவரது வெளிப்படையற்ற தன்மையும் , ஈழ தமிழர்கள் விடயத்தில் அவர் வடித்த நீலிக்கண்ணீரும் ,அவர் இழைத்த துரோகமும் , அவர் நடித்த நாடகமும் தான் இன்றைய கொண்டாட்டத்துக்கும் இறப்பை நோக்கிய எதிர்பார்ப்பிற்குமான காரணம் . அவர் இறப்பை கொண்டாட வேண்டும் என்று நாம் நினைக்கவில்லை .ஆனால் அவர் உயிர் பிரியும் முன்னர் அவர் எமக்கு இழைத்த அநீதிகளை எழுதியே ஆக வேண்டும் என்ற ஆதங்கம் ஒரு தமிழனாக எனக்கும் நிறையவே இருக்கிறது .

– ஜெயமதன்-

Leave A Reply

Your email address will not be published.