காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார். #KarunanidhiHealth #Karunanidhi #RahulGandhi #DMK
தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததைடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை சந்தித்து உடல்நலம் விசாரிக்க இன்று வருகை தந்தார். ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்தும் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “கருணாநிதி தைரியமானவர் நலமாக இருக்கிறார். அவர் நலமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறினார்.
கருணாநிதி உடல் நிலை சீராகி வருகிறது, மேலும் சில நாட்கள் சிகிச்சை – காவேரி மருத்துவமனை
திமுக தலைவர் கருணாநிதி நன்றாக தேறி வருகிறார் என்றும் மேலும் சில நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது எனவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. #KarunanidhiHealth #Karunanidhi #DMK #KauveryHospital
திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 27-ம் தேதி நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்த 5 ஆவது அறிக்கையை காவேரி மருத்துவனை இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது. மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும். 29-ம் தேதியில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பின்னர் தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது.
அவரது உடல்நிலை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் முக்கிய உறுப்புகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. அவரது கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டம் சீராக்கப்பட வேண்டியதுள்ளது.
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.