கள்ள நோட்டு வழக்கில் கைதான நடிகைக்கு போலி சாமியாருடன் தொடர்பு

0

கேரளாவில் கள்ளநோட்டு வழக்கில் கைதான டி.வி. நடிகைக்கு போலி சாமியாருடன் தொடர்பு உள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கள்ள நோட்டு வழக்கில் கைதான நடிகைக்கு போலி சாமியாருடன் தொடர்பு
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

இதைதொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இடுக்கி பகுதியில் கள்ள நோட்டுகளுடன் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேரள டி.வி. நடிகை சூர்யாவிடம் இருந்து அந்த கள்ள நோட்டுகளை வாங்கியதாக தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து கொல்லத்தில் உள்ள நடிகை சூர்யாவின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. நடிகை சூர்யா, அவரது தாய் ரமாதேவி, சகோதரி சுருதி ஆகியோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

கள்ள நோட்டு அச்சடிப்பு கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது பற்றியும் அவர்களுக்கு உதவியவர்கள் பற்றியும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை சூர்யாவுக்கு போலி சாமியார் ஒருவருடன் தொடர்பு இருக்கும் திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கைதான வினு, சன்னி

அந்த சாமியார் மூலமே சூர்யாவுக்கு கள்ள நோட்டு கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதன் பிறகே அவர் தனது வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழகத்தில் விட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த சாமியார் பற்றியும் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கள்ள நோட்டு அச்சடிக்க கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்பட நவீன கருவிகளை நடிகைக்கு வினியோகம் செய்ததாக கஞ்சியூர் பகுதியை சேர்ந்த வினு (வயது 48), சன்னி (42) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.