சனிக்கிழமை கவிதை: ராணி அக்கா! தேன்மொழிதாஸ்

0

°°°°°°°°°°°°°°°°
பனியோடு எரிந்து
பசும் மலைகள் சாம்பலாய்ப் புகையும்
பன்னரிவாள் தூக்கிப் புல்லறுக்கப் போவோம்

நீரிஞ்சி மரம் வளைத்துக் கிளை வெட்டுவாய்
பழமெல்லாம் எனக்கு இலை மாட்டுக்கு

குறிஞ்சிக் கிளை வளைத்து
குழை வெட்டுவாய்
பூவெல்லாம் எனக்கு குழை மாட்டுக்கு

கையோடு பூங்கொடியில் நார் உரித்து
குறிஞ்சிப்பூக் கட்டி வைத்து விடுவாய்
காட்டுப் பிச்சியும் கலந்து கதம்பமாய்

தேங்காய்ப் பொட்டுத் தேடி அலைவோம்
இடையிடையே அகப்படும்
கறிக்காளானும் மரக்காளானும் மடியில் நிறையும்

அம்மாவுக்குப் பிடிக்கும் கருணைக் கீரை
பெரணிச் செடிக்குப் பின்னாலிருக்கும்
பறிக்கப் போகையில் உரசும் செந்தட்டி
அரித்து உயிரெடுக்கும்

அருகம்புல் அறுக்க ஆசைப்படுவேன்
பக்குவம் பத்தாதென பன்னரிவாள் பிடுங்குவாய்
கொடிப்புல் தேடி உருவி
கன்றுக்குட்டிக்குக் கட்டி தூக்கிக் கொள்வேன்

வரும் வழியில் உன்னையும் என்னையும்
நனைக்கும் சோலை மழை
சுமை கூட்டும் மழைத் தண்ணீர்
கழுத்து நரம்பை இறுக்கும்

இன்னும் இன்னும் என உண்ணும்
மணியாட்டி மாடு

அக்கா
அதே மலைச்சாரலில் நீ நடக்கும் பாதைகளில்
அருகம்புல் வேர்கூடக் கருகிப் போயிருக்கும்

நீரிஞ்சியிலை
குறிஞ்சிக் குழை
என எங்கேயோ அசைபோடுகிறேன் நான்

– தேன்மொழி தாஸ் – 1997

இசையில்லாத இலையில்லை 2001 வெளியீடு

தேன்மொழிதாஸ் தமிழக கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர். அநாதி காலம் (2003), ஒளியறியாக் காட்டுக்குள் (2007) , நிராசைகளின் ஆதித்தாய் (2016) , காயா (2017 ) முதலிய தொகுப்புக்களை வெளியிட்டவர். 60இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை எழுதியவர்.

Leave A Reply

Your email address will not be published.