சிங்கள அரசுக்கு புலி அச்சம் எதுவரை தொடரும் தெரியுமா?

0

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகளை அண்மிக்கின்றபோதும் இலங்கை அரசியல் என்னவோ விடுதலைப் புலிகளை மையப்படுத்தியே சுழல்கிறது. இதன் மூலம் தமிழீழ மக்களின் விடுதலையின் அடையாளமாகவும் உரிமைக் குரலாகவும் புலிகள் இயக்கமே இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இருக்கும் என்பதை இந்த உலமும் சிங்களமும் புரிந்துகொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளை பற்றிய நல்ல விடயங்கள் பேசப்பட வேண்டி இருப்பதன் காரணமாகவே சிங்கள தேசமும் சிங்களப் பேரினவாதிகளும் விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்துகின்றனர். அத்துடன் விடுதலைப் புலிகளை தம் இதயத்தில் வைத்து ஈழ மக்கள் பூசிப்பதன் காரணமாகவே சிங்கள அரசும் சிங்களப் பேரினவாதிகளும் புலிகள் என்ற பெயரை ஈழமக்களை உச்சரிக்க விட மறுக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் அரங்கில் இல்லாவிட்டாலும் அவர்கள் கடந்த காலத்தில் நிகழ்த்திய வீர தீர சமர்களின் நினைவுகளிலிருந்து மீள முடியாமை காரணமாகவே சிங்கள தேசமும் சிங்களப் பேரினவாதிகளும் புலிகள் என்ற இயக்கத்தின் பெயரையும் பிபாகரன் என்ற தலைவனின் பெயரையும் கேட்டால் அலறி அடிக்கிறார்கள்.

உலகில் ஒரு இயக்கத்தின் பெயரும் உலகில் ஒரு தலைவனின் பெயரும் ஒரு எதிரி இனத்தை ஆட வைக்கிறது என்றால் அது விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்தின் பெயர்தான். அது தலைவர் பிரபாகரன் என்ற பெருந்தலைவனின் பெயர்தான். அண்மைய காலத்தில் புலிகள் இயக்கத்தையும் தலைவர் பிரபாகரன் பெயரையும் உச்சரித்ததைக் கண்டே சிங்கள தேசம் ஆடி நிற்கிறது.

மௌனிக்கப்பட்ட ஒரு இயக்கத்தின் பெயரும் ஒரு தலைவரின் பெயரும் வெறும் பெயராக இருந்து கொண்டே போராடுவதும் போர் தொடுப்பதும் எதிர்த்து நிற்பதும் ஈழத்தில்தான். தலைவர் பிரபாகரனின் பெயர்தான் அது. விடுதலைப் புலிகள் களத்தில் இருந்த காலத்தில் மாத்திரமல்ல, களத்தில் இல்லாத காலத்திலும் தமது இயக்கம் சார்ந்த வலிமையான நம்பிக்கையை விதைத்துள்ளனர்.

மாபெரும் இனப்படுகொலைப் போரின் பின்னர் தமக்காக ஆயுதம் தாங்கிப் போரிட்ட இயக்கத்தின் நினைவுகளை ஆயுதமாக்கிய மக்கள் ஈழ மக்களே. மக்களை அழிக்கவும் அவர்கள் தாய் நாடு பற்றிய கனவை மறக்கவும் இனியும் தாய்நாடு கோரியும் அதனை முன்னெடுத்த கிளர்ச்சி நினைவுகளை அழிக்கவுமே ஒரு இனப்படுகொலையை நிகழ்த்தப்படுகிறது. ஆனால் எமது அடையாளமும் உரிமையும் விடுதலைப் புலிகள்தான் என்பதை ஈழ மக்கள் உரைக்கின்றனர்.

அண்மையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா விடுதலைப் புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் சிங்களத்தை ஆட்டுவித்தது. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரதியமைச்சர் நளீன் பண்டார யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். புலிகளின் காலத்தில் குற்றச் செயல்கள் இருக்கவில்லை என தமிழ் மக்கள் கூறுவது அவர்களின் அறியாமை என்று அவர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

உண்மையில் இதைக் கூறுவதற்காகவே நளீன் யாழ்ப்பாணம் வந்திருக்கிறார். ஈழத்தில் மீண்டும் விடுதலைப் புலிகளை வலியுறுத்தும் குரல்கள் எழுகின்றன. அதிலும் சிங்கள அரசில் அமைச்சராக இருந்து கொண்டே ஒருவர் புலிகள் மீண்டும் களத்தில் இறங்க வேண்டும் என்றும் அதன் மூலமே தமிழீழ மண் அமைதி பெறும் என்றும் கூறியுள்ளார். இதைவிடவும் சிங்கள அரசுக்கு ஒரு செருப்படி தேவையில்லை. எனவே இதனை நசுக்கவே நளீன் வந்தார்.

சிங்கள அரசே, சிங்களப் பேரினவாதிகளே எங்கள் விடுதலைப் புலிகளைப் பற்றி பேச முதல் உங்கள் வாய்களை கழுவுங்கள். எங்கள் மாவீரர்கள் பற்றிப் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. அவர்கள் யார்? அவர்களின் வெள்ளை உள்ளத்தில் இருந்த கனவு என்ன என்பதை நீங்கள் உணர்ந்திருந்தால் எங்களை கொத்துக் கொத்தாக அழித்திருக்க மாட்டீர்கள். நீங்கள் விடுதலைப் புலிகளை புரிந்திருந்தால் இன்று தமிழீழம் மலர்ந்திருக்கும்.

நாங்கள் எங்கள் விருப்புக்களைப் பற்றியும் உரிமைகளைப் பற்றியும் எங்கள் வாழ்வின் வரலாறுகளைப் பற்றியும் பேசும்போது எங்களை பயங்கரவாதி என்பதை முதலில் நிறுத்துங்கள் சிங்களவர்களே. நாங்கள் உங்களுடையவை எதனையும் கேட்கவில்லை. உங்கள் நிலங்களுக்கும் வரவில்லை. எங்கள் நிலத்தில் எங்கள் கதையைப் பேசுகிறோம். அதனை வைத்து எங்களை தவறாக சித்திரிக்க உங்களுக்கு உரிமை இல்லை. எங்கள் உரிமையை எங்களிடம் தராத நீங்கள் எங்களை எப்படியேனும் அழிக்கும் உரிமையை மாத்திரம் எடுத்துக்கொள்கிறீர்களா?

உங்களுக்கு வரலாற்றின் பயம் எப்போதும் இருக்கும். ஆனையிறவிலும் கட்டுநாயக்கவிலும் சந்தித்த நிகழ்வுகள் எப்போதும் நினைவில் வரும். அதனால்தான் புலிகளை அழித்ததைப்போலவே குற்றச் செயல்களையும் அழிப்போம் என்று காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர யாழில் தெரிவித்துள்ளார். உண்மையில் சிங்கள அரசுக்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் புலி அச்சம் தொடர்கிறது. புலி என்ற விம்பம் எப்போதும் அச்சுறுத்துகிறது.

தமிழர்களின் தாயகத்தை விட்டு வெளியேறி அவர்களின் உரிமையை அவர்களிடம் கையளிக்கும்வரும் வரை உங்களுக்கு புலி அச்சம் தொடரும். புலிகள் விம்பமாகவேனும் உங்கள் உறக்கத்தை கலைப்பார்கள். விரைவில் முடிவுக்கு வந்து உங்கள் அமைதியை பெற்றுங்கொள்ளுங்கள் சிங்கள நண்பர்களே!

ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.
13.07.2018.

Leave A Reply

Your email address will not be published.